பாலிவுட் நடிகை கிருத்தி சனோன், ஐக்கிய நாடுகள் சபையின் பாலின சமத்துவத்திற்கான கௌரவ இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே நிலவும் பாரபட்ச மனப்போக்குகளை நீக்குவதிலும், இதுகுறித்து மக்களிடையே நிலவி வரும் தவறான கருத்துக்களை சரிசெய்வதிலும் கிருத்தி சனோன் பங்கேற்க உள்ளார்.

இதைப்பற்றி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கிருத்தி சனோன், “நான் முற்போக்கான குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், என்னைச் சுற்றி நடைபெறும் சமத்துவமின்மையைப் புறக்கணிக்க முடியாது. பாலிவுட்டில் பல்வேறு பாரபட்சங்களை நேரில் கண்டுள்ளேன். பெரும்பாலான நேரங்களில் அவற்றை தெளிவாக அறிய முடியாவிட்டாலும், சில நேரங்களில் நடிகர்களுக்குக் கிடைக்கும் கார் வசதி, ஹோட்டல் வசதி போன்ற சிறிய விஷயங்களில்கூட வேறுபாடுகள் வெளிப்படுகின்றன.
அது வெறும் கார் பற்றியது அல்ல. ஆனால் நான் பெண் என்பதால்தான், அந்த நிலைமைகள் என்னை அப்படியே உணர வைக்கின்றன. எதையும் சமமாக நடத்த வேண்டும். சில நிகழ்ச்சிகளுக்குக் கூட நடிகைகளை முதலில் அழைத்து காத்திருக்க வைப்பார்கள், பின்னர் நடிகர் வருவதற்காக காத்திருப்பார்கள். இதுகுறித்து நான் நேரடியாக எதுவும் கூறவில்லை. ஆனால் இவ்வாறான விஷயங்களில் மனநிலையை மாற்றிக் கொள்வது மிக அவசியம்.வீடுகளில் இருந்து பணியிடங்கள் வரை, அன்றாட வேலைகளிலிருந்தே பாலின சமத்துவம் ஆரம்பிக்கிறது. அது சிறிய விஷயங்களில்கூட சமமாக இருக்க வேண்டும் என்பதில்தான் தொடங்குகிறது” என்று தெரிவித்தார்.நடிகை கிருத்தி சனோன், தற்போது இந்தியில் நடிகர் தனுஷ் நடிக்கும் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.