தமிழ் சினிமாவில் பிரபலமான ஜோடியாக ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி தம்பதியினர் திகழ்ந்து வந்தனர். பள்ளி மாணவியாக இருக்கும்போதே பாட வந்த சைந்தவியை காதலித்த ஜி.வி. பிரகாஷ் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்த பிறகு அவரை திருமணம் செய்து கொண்டார். இருவரது கூட்டணியில் வெளியான பாடல்கள் மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் அளவுக்கு இருந்தது.கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக ஒன்றாக இருந்த இவர்கள் கடந்த ஆண்டு பிரிவதாக தெரிவித்தனர். இதனால் இவர்களது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இவர்களின் பிரிவுக்கு நடிகை திவ்யபாரதி தான் காரணம் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்தன.

2021-ம் ஆண்டு வெளியான ‘பேச்சிலர்’ படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து திவ்ய பாரதி பணியாற்றி உள்ளார். அப்போதில் இருந்தே அவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் பரவின. இது குறித்து இருவரும் பேசியிருந்தாலும், அவை மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் குறித்து திவ்யபாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஜி.வி. பிரகாஷின் குடும்பப் பிரச்சனைகளில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த அவர், ஒரு நடிகரை, குறிப்பாக திருமணமான ஒருவருடன் ஒருபோதும் டேட்டிங் செல்லமாட்டேன். நிச்சயமாக ஒரு திருமணமான ஆணுடன் டேட்டிங் செல்லமாட்டேன். ஆதாரமற்ற வதந்திகள் குறித்து கவலைப்பட தேவையில்லை என்பதால் இதுவரை அமைதியாக இருந்து வந்தேன். ஆனால் அவை ஒரு எல்லையை தாண்டிவிட்டதால் தற்போது வெளிப்படையாக பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பொய்யான தகவல்களால் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க அனுமதிக்க மாட்டேன்.
நான் ஒரு வலிமையான, சுதந்திரமான பெண். வதந்திகளால் சோர்ந்துவிட மாட்டேன். வதந்தியை பரப்புவதற்குப் பதிலாக, ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவோம். இந்த விஷயத்தில் இதுவே எனது முதல் மற்றும் இறுதி அறிக்கை என்று திவ்யபாரதி கூறியுள்ளார்.