‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் முத்தழகு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து தேசிய விருது வென்றவர் நடிகை பிரியாமணி. ஷாருக்கானுடன் இணைந்து அட்லி இயக்கிய ‘ஜவான்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதன்பின்னர், மலையாளத்தில் ‘ஆபீஸர் ஆன் டூட்டி’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது தமிழில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில், “ஹிந்தி சினிமாவில் தென்னிந்திய நடிகர்கள் மதிக்கப்படுவதில்லை” என்ற கருத்து குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நானும் சிலர் இப்படி சொல்வதை கேட்டிருக்கிறேன். ஆனால், நான் ஹிந்தி படங்களில் நடித்தபோது, யாரும் என்னை அவமதிக்கவில்லை.
அனைவரும் எப்படிப் பழகுகிறார்களோ, அதுபோலவே என்னிடமும் நடந்தார்கள். சில பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய நடிகர்களுக்கு மிகுந்த மரியாதை அளிக்கிறார்கள். எனது அனுபவத்தில், தென்னிந்திய கலைஞர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் எனும் சம்பவங்களை நான் பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.