நடிகர் அஜித்குமார், ஒருபுறம் தனது நடிப்பு வேலையிலும், மறுபுறம் கார் ரேஸிலும் பிஸியாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ஒரு ஆங்கில நாளிதழுக்கு அஜித் அளித்துள்ள பேட்டியில், கார் ரேஸ் தொடர்பான அனுபவங்கள் மற்றும் தனது அடுத்த படத் திட்டம் குறித்த தகவல்களை அஜித் பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது: “கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொள்ள கடந்த 2024ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திலிருந்து இன்றுவரை, நான் 42 கிலோ எடையை குறைத்துள்ளேன். இதுவரை நான் கார் ரேஸ் மற்றும் சினிமா ஆகிய இரண்டையும் மாறிமாறி கவனித்து வந்தேன். இதனால் மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. எனவே இனி ஒரு தெளிவான முடிவை எடுக்கப்போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இனிமேல் கார் ரேஸ் நடைபெறும் காலங்களில் நான் எந்த ஒரு படத்திலும் நடிக்கமாட்டேன், அதுபோல சினிமாவில் நடிக்கும்போது எந்த ஒரு ரேஸ் போட்டியிலும் பங்கேற்கமாட்டேன் என முடிவெடுத்துள்ளேன். அதாவது, கார் ரேஸ் இருக்கும் நேரத்தில் அதில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்துவது சிறந்தது. வருகிற நவம்பர் மாதத்தில் என் அடுத்த திரைப்படத்தில் நடிக்க உள்ளேன். அந்த படம், அடுத்த ஆண்டான 2026ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.