நெட்ஃப்லிக்ஸ்-ல் வெளியாகவுள்ள திரைப்படம் ‘மேட் இன் கொரியா’. இப்படத்தில் பிரியங்கா மோகன், பார்க் ஹை-ஜின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை ரா. கார்த்திக் இயக்கியுள்ளார்.இயக்குனர் ரா. கார்த்திக் இப்படம் குறித்து கூறுகையில், கடந்த பத்து ஆண்டுகளில் கொரிய கலாச்சாரம் இந்திய கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘மேட் இன் கொரியா’ கதையில் பணியாற்றத் தொடங்கும் முன்பு நான் கே-டிராமாவையோ, கே-பாப் இசையையோ பெரிதாக கேட்டது பார்த்தது இல்லை. ஆனால், இந்தக் கதைக்காக ஆராய்ச்சி செய்தபோது கொரியாவும் தமிழும் இடையே உள்ள ஆழமான கலாச்சார மற்றும் வரலாற்று ஒற்றுமைகள் என்னை ஆச்சரியப்படுத்தின. அந்த ஆர்வமே என்னை இந்தக் கதையை உருவாக்கத் தூண்டியது. ‘மேட் இன் கொரியா’ நம்பிக்கை, மகிழ்ச்சி, மற்றும் தனித்துவமான கலாச்சார பின்புலத்தை கொண்டாடும் ஒரு சிறப்பான பயணம் என்றார்.
நடிகை பிரியங்கா மோகன் இப்படம் குறித்து பேசுகையில், ‘மேட் இன் கொரியா’ கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான். கதை கேட்டவுடனே எனக்கு பிடித்துவிட்டது. நான் கே-டிராமாஸை எப்போதும் ரசிப்பவள். இந்தக் கதையின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெரும் உற்சாகமளித்தது. நான் நடித்துள்ள கதாபாத்திரத்துடன் எனக்கு ஆழமான தனிப்பட்ட தொடர்பு உள்ளது. கார்த்திக் சார் கதை சொன்னபோதே அது எனது மனதை தொட்டது. நெட்ஃப்லிக்ஸ் ஒரிஜினல்ஸின் இந்தப் பயணத்தில் இணைந்திருப்பது எனக்கு பெருமை என்றார்.