பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ள ‘மாமன்’ திரைப்படத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சுவாசிகா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாய்மாமன் உறவை மையமாகக் கொண்டு ஒரு குடும்பத் திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. மே 16ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான டிரைலர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்பட விழாவில் பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, “மாமன் திரைப்படத்தில் நான் ஒரு பங்காக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கே வந்துள்ள அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சினிமாவை மிகுந்த அன்புடன் நேசிக்கும் கலைஞர்களைதான் இந்த விழாவிற்கான சிறப்பு விருந்தினர்களாக அழைத்துள்ளனர்.
இந்த படத்தின் டிரைலரை பார்த்த பிறகு பலரும் உணர்ச்சிவசப்பட துவங்கி, கண்களில் கண்ணீர் வந்ததாகச் சொன்னார்கள். அதற்கு காரணமான எடிட்டர் கணேஷ் சிவா மற்றும் இசையமைப்பாளர் ஹேஷாமுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். மே மாதம் 1ஆம் தேதி டிரைலர் வெளியானது. படம் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்குள் படத்தின் உள்ளடக்கம் முழுவதும் வெளிவந்துவிடும் போல எனக்கு பயம் இருந்தது. ஆனால் அதை யாரிடமும் சொல்லவில்லை. அதற்குள் இரு நிமிடங்களில் சொல்ல வேண்டியது அனைத்தையும் சரியாக சொல்வதில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.