மலையாள திரையுலகில், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் மற்றும் மீனா நடித்த திரிஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து, சில ஆண்டுகள் கழித்து, அதன் இரண்டாம் பாகமும் வெளியாகி, முதல் பாகத்திற்கு சமமான வெற்றியை அடைந்தது. இப்படத்தில் மோகன்லால் ஒரு நடுத்தர குடும்பத்தின் தலைவராகவும், மீனா அவரது மனைவியாகவும் நடித்திருந்தனர். இந்த படம் மீனாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மேலும், அவரது புதிய இன்னிங்ஸை வெற்றிகரமாக துவக்கி வைத்த முக்கிய படமாக இது இருந்தது.
ஆனால், முதலில் இந்த கதாபாத்திரம் என்னை தேடி வந்தது, ஆனால் நான் நடிக்க முடியாமல் போனது என்று வருத்தத்துடன் கூறியுள்ளார் நடிகை ஷோபனா. எண்பதுகள் மற்றும் தொள்ளாயிரங்களில் மோகன்லாலுடன் இணைந்து பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்தவர் தான் ஷோபனா. திரிஷ்யம் பட வாய்ப்பு வந்த சமயத்தில், அவர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்திருந்தார்.
அதே நேரத்தில், வினீத் சீனிவாசன் இயக்கத்தில் திர என்ற படத்தில் நடித்து கொண்டிருந்தார். அதன் காரணமாக திரிஷ்யம் படத்திற்காக தேதிகளை ஒதுக்க முடியவில்லை. “அந்த நேரத்தில் நான் திரிஷ்யம் படத்திற்கான ஸ்கிரிப்டை கூட படிக்கவில்லை, ஏனெனில் எனக்கு அதை தேர்வு செய்ய முடியாது என்பது முன்னரே தெரிந்துவிட்டது” என்று கூறியுள்ளார் ஷோபனா.