சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி அவர்களின் ‘கசிவு’ நாவல், அதே பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. தேசிய விருது பெற்ற நடிகர் எம். எஸ். பாஸ்கர், விஜயலட்சுமி, ஹலோ கந்தசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை செண்பகவல்லி இயக்கியுள்ளார் மற்றும் வெற்றிச்செல்வன் தயாரித்துள்ளார். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வென்ற ‘கசிவு’ தற்போது ஓ.டி.டி. தளத்தில் நேரடியாக வெளியானது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும் போது எம். எஸ். பாஸ்கர் கூறியதாவது:“ஒரு நடிகராக, ஆதாயத்திற்காகவும் நடிக்க வேண்டும்; ஆத்ம திருப்திக்காகவும் நடிக்க வேண்டும். ‘கசிவு’ என் வாழ்க்கையில் ஆத்ம திருப்தி அளித்த திரைப்படம்.
சொர்க்கம், நரகம் என்பது மரணத்திற்குப் பிறகு கிடைக்காது இங்கேயே இருக்கிறது. நாம் செய்த தவறுகளுக்காக தொடர்ந்து மன்னிப்பு கேட்டு வாழ வேண்டும். இப்படங்களைப் பார்த்தாலே எல்லோரும் உடனே திருந்திவிட முடியாது; ஆனாலும் ஒரு சிந்தனை எழுகிறது. பல சட்டங்கள் வந்தாலும் குற்றங்கள் குறையவில்லை; மாறாக அதிகரித்துள்ளன. எனக்கு இதுபோல் நல்ல கதாபாத்திரங்களை வழங்குங்கள். நான் இன்னும் என் நடிப்பை மேம்படுத்திக் கொண்டிருக்கிறேன். எழுத்தாளர் பூமணியின் வார்த்தைகளை உரையாடலாகப் பேசியது, எனக்கே இன்னொரு தேசிய விருது கிடைத்தது போல உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

