ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கூலி’ படம் திரைக்கு வந்தபோது பல விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும் அவற்றைக் கடந்து அந்த படம் வசூலில் வெற்றியை பெற்றது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியில், “ஒவ்வொரு படம் வெளியாவதற்கு முன்பும் ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள்.

அவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நாங்கள் படமெடுக்க முடியாது. ’கூலி’ படத்தை எடுத்துக் கொண்டால், அது டைம் டிராவல் படமோ, எல்சியூ படமோ அல்ல. ஆனால் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தனர். அவர்கள் சொல்லும் கருத்துக்களை நாங்கள் தடுத்து நிறுத்த முடியாது.
அதற்குக் காரணம், அது ரஜினி சார் படம் என்பதோடு, நான் இயக்கும் படங்களையும் அவர்கள் கருத்தில் கொண்டு தங்கள் தனிப்பட்ட எண்ணங்களை வெளியிடுகிறார்கள். என்னை பொருத்தவரை, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் நான் படமெடுக்க மாட்டேன். நான் எழுதும் கதை அவர்களை திருப்திப்படுத்தினால் அதுவே எனக்கு மகிழ்ச்சி. இல்லையெனில் அடுத்த படத்தில் அதைச் செய்ய முயற்சி செய்வேன்.மேலும், ஒரு படத்தின் வெற்றியென்பது கோடிக் கணக்கில் வசூலிப்பதில் மட்டுமல்ல. அதை சிறப்பாக எடுத்து ரசிகர்களுக்கு காட்டிவிட்டால் அதுவே உண்மையான வெற்றி” என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.