கவுதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடித்த ‘மின்னலே’ படத்திற்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். அந்த படத்திற்கு பிறகு பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்து வந்துள்ளார். சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த ‘பிரதர்’ படத்திற்கு இசையமைத்ததற்குப் பிறகு, தற்போது அவர் ‘பேட் பாய் கார்த்திக்’ உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில், அவர் ஒரு பேட்டியில் பேசும் போது, ‘ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த பாடகர்களான மலேசியா வாசுதேவன், பவதாரணி போன்றவர்களின் குரலை மீண்டும் கொண்டு வருகிறார்கள். இதுபோன்ற முயற்சிகளில் நீங்கள் ஏன் ஈடுபடவில்லை?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹாரிஸ் ஜெயராஜ், என்னைப் பொருத்தவரை எப்போதும் தற்போதுள்ள பாடகர்களுக்கே வாய்ப்பு கொடுப்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். காரணம், இன்னும் பலர் பாடுவதற்கான வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், அது அவர்களுக்குப் பயனாக அமையும். ஆனால், மறைந்த பாடகர்களின் குரலை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் கொண்டு வரும் முயற்சிகளில் நான் ஈடுபட விரும்பவில்லை, என்று தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.