தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சித்தார்த், ‘மிஸ் யூ’ திரைப்படத்துக்குப் பிறகு ‘3 பிஎச்கே’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இது சித்தார்தின் 40-வது படம் ஆகும். இந்த படத்தை ‘8 தோட்டாக்கள்’, ‘குருதி ஆட்டம்’ ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படத்தில், சித்தார்த் உடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை 4ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மிடில் கிளாஸ் குடும்பங்களில் உள்ளவர்கள் தங்களுக்கென 3 பிஎச்கே வீடு வாங்க வேண்டும் எனக் காணும் ஆசையையும், அந்த நிஜமான கனவையும் மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியானதும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால், இப்படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சரத்குமார், “தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளுக்கான ‘3 பிஎச்கே’ படத்தின் டப்பிங் செய்யும் போது உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டேன். அந்த அளவுக்கு படம் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது” என கூறியுள்ளார்.