திவி நிதி சர்மாவின் எழுத்தில், இயக்குநர் ஆர். எஸ். பிரசன்னா இயக்கத்தில் உருவாகிய ‘சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஆமிர் கான் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கூடைப்பந்து கற்றுக் கொடுக்கும் பயிற்சியாளராக நடித்துள்ளார். அவருடன் ஜெனிலியா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம், 2007-ம் ஆண்டு ஆமிர் கான் இயக்கிய மற்றும் நடித்த ‘தாரே ஜமீன் பர்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இப்படம் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து இதன் பின்னணியில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஒரு பேட்டியில் ஆமிர் கான் பேசினார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, “‘லால் சிங் சத்தா’ திரைப்படம் தோல்வியடைந்ததும், நானே உடைந்து போனேன். எனவே ஒரு ப்ரீக் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த எண்ணத்தை இயக்குநர் பிரசன்னாவிடம் கூறியபோது, அவர் முதலில் ஏமாற்றமடைந்தாலும், பின்னர் எனது நிலையை புரிந்துகொண்டு, தயாரிப்பாளராக இருக்கும்படி முன்மொழிந்தார். அதற்கு நான் ஒத்துக்கொண்டேன். அதன்பின் ஃபர்ஹான் அக்தர் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரிடம் இந்த கதையில் நடிக்க அழைத்தோம். இந்தி மற்றும் தமிழில் படம் எடுக்க திட்டமிட்டோம். இருவருக்கும் கதையால் ஈர்ப்பு ஏற்பட்டது.
பின், எழுத்தாளர் திவ்யா மற்றும் இயக்குநர் பிரசன்னாவுடன் திரைக்கதை குறித்து விவாதித்தபோது, இப்படத்தில் நானே ஏன் நடிக்கக்கூடாது என எண்ணம் தோன்றியது. அந்தளவுக்கு கதை எனக்குப் பிடித்திருந்தது. ஆரம்பத்தில் இந்த கதைக்கே நான் ஹீரோவாக இருப்பது திட்டமிட்டதே என பிரசன்னா நினைவுகூர்ந்தார். அவர் அந்த முடிவில் ஒத்துக்கொண்டதும், ஃபர்ஹான் அக்தரும், சிவகார்த்திகேயனும் இருவரையும் நேரிலோ அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விளக்கம் அளித்து மன்னிப்புக் கேட்டேன். இருவரும் என்னுடைய சூழ்நிலையை புரிந்துகொண்டனர்” என்று கூறினார்.