போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘கஜானா’. இதில் இனிகோ பிரபாகர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் வேதிகா மற்றும் சாந்தினி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்கள் தவிர யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், பிரதாப் போத்தன், பியாண்டு, செண்ட்ராயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் அச்சு ராஜாமணி. ஒளிப்பதிவை கோபி துரைசாமி மற்றும் வினோத் ஜே.பி செய்துள்ளனர். இந்த படம் வருகிற 9-ம் தேதி வெளியாக உள்ளது.

படத்தின் அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகை பூமிகா, ‘‘கஜானா’ படத்தின் ஒன்லைன் பற்றிச் சொன்னபோது எனக்கு அது மிகவும் ஆர்வமூட்டும் வகையில் இருந்தது. ரசிகர்களின் பார்வையிலிருந்து இந்த படத்தின் கதையை நான் கேட்டபோது எனக்கு மிகுந்த ஈர்ப்பு ஏற்பட்டது. இந்திய சினிமாவில் இதுபோன்ற அட்வெஞ்சர் படங்கள் இதுவரை வந்ததாக நினைவில்லை.
இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரும். நான் இதில் ஒரு நடிகையாக பங்கேற்றுள்ளாலும், ரசிகையாக இப்படத்தை திரையில் பார்க்கும்போது மிகுந்த ஆவலாக இருக்கிறது. இந்த படம் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் நிச்சயமாக பிடிக்கும். குழந்தைகளை மகிழ்விக்கும் படத்தில் நான் நடித்திருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இந்த படத்தை இயக்கியவர் பிரபதீஸ் சாம்ஸ் தான், அதே நேரத்தில் தயாரிப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். இரண்டு வேலையையும் ஒரே நேரத்தில் செய்தது மிக எளிதல்ல. படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது’’ என தெரிவித்தார்.