பாலிவுட் நடிகராக அனுபம் கெர், கடந்த நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக பாலிவுட் மட்டுமல்லாமல், தென்னிந்திய மொழிகளிலும் பல்வேறு படங்களில் குணசித்திர மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் அவர் நடித்த படங்களில் பிரபுதேவா நடித்த “விஐபி”, “லிட்டில் ஜான்”, “குற்றப்பத்திரிக்கை” உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை. தற்போது கூட சினிமாவில் பிஸியாக உள்ள அனுபம் கெர், இன்னும் தனக்கென சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டிலேயே வசித்து வருகிறார். இதற்கான காரணத்தை அவர் சமீபத்திய ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, தந்தை இறந்த பிறகு பல குடும்பங்களில் சொத்துப் பிரிவில் பிரச்சனைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. எனது பல நண்பர்கள் தங்களுக்குள்ளேயே இதுபோன்ற அனுபவங்களைச் சந்தித்துள்ளனர். சிலர் தங்களுடைய தந்தையை வீடிலிருந்து வெளியே அனுப்பியதாகவும், மற்றவர்கள் தந்தையை கையெழுத்திடக் கட்டாயப்படுத்தியதாகவும் எனக்குத் தெரிவித்தனர்.
இதுபோன்ற பிரச்சனைகள் என் வாழ்க்கையில் ஏற்படக்கூடாதென்பதால், வீடு வாங்கும் எண்ணத்தை தவிர்த்து, பணத்தைத் தனியாக வைத்திருப்பதே எளிது என நினைத்தேன். அதனால் இன்று வரை வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்” என்று கூறினார்.