மலையாளத் திரையுலகில் கடந்த ஆண்டு வெளியான பிரேமலு படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றவர் மமிதா பைஜு. அந்தப் படத்தின் வெற்றி அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது மட்டுமல்ல, தற்போது தமிழ் திரையுலகிலும் விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் அளவிற்கு அவரை உயர்த்தியுள்ளது. இதனுடன் இன்று வெளியான டியூட் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மமிதா பைஜுவின் தாய்மொழி மலையாளம். இதே நிலையில், கொச்சியில் நடைபெற்ற டியூட் படத்தின் பிரமோஷன் நிகழ்வில், அந்தப் படத்தை வெளியிடும் கேரள தயாரிப்பாளர் அவரிடம் “உங்களுக்கு எந்த மொழிப் படங்களில் நடிப்பது வசதியாக இருக்கும்?” எனக் கேட்டார்.
இதற்கு மமிதா பைஜு பதிலளித்தபோது, மலையாளம் மட்டுமல்ல, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கும் போதும் நான் எப்போதும் ஒரு ‘க்ளீன் ஸ்லேட்’ போல் செல்வேன். அந்தந்த மொழியின் சூழலை, பண்பாட்டை, வேலை முறைமையைக் கற்றுக்கொண்டு அதற்கேற்றவாறு என்னை மாற்றிக் கொள்வேன். அதனால் இதுவரை எந்த மொழிப் படப்பிடிப்பிலும் பாஷை, உணவு, வானிலை தவிர வேறு எந்த சிரமமும் எனக்கு ஏற்படவில்லை. மலையாளத்தில்கூட ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும்போது, இரண்டு யூனிட்டுகளிலும் வேலை செய்தபோதும் வித்தியாசம் அதிகம் இருந்தது. ஆனால் அந்த வேறுபாட்டை புரிந்துகொண்டு வேலை செய்ததால் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை,” என்று மிகுந்த நயத்துடன் பதிலளித்தார்.