அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர் மற்றும் கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த மே 1-ம் தேதி வெளியான இத்திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இலங்கை தமிழர்களான சசிகுமாரின் குடும்பம் அங்குள்ள பொருளாதார சிக்கல்களால் சட்டவிரோதமாக தமிழகத்துக்குள் நுழைகின்றனர். அதன் பிறகு அவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களை நகைச்சுவை மற்றும் உணர்வுடன் படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்தப் படத்தின் ஒரு காட்சியில் ‘மம்பட்டியான்’ பட பாடல் இடம்பெற்றுள்ளது. அந்த பாடலில் சசிகுமார் தனது இரு மகன்களுடன் இணைந்து நடனமாடும் காட்சி உள்ளது. இதனையடுத்து, அந்தப் பாடலுக்கு படக்குழுவினர் அனைவரும் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் தியாகராஜனிடம், “‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் ‘மம்பட்டியான்’ பாடலை பயன்படுத்த அனுமதி கேட்டார்களா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அவர்கள் என்னிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. ஆனால், அந்தப் பாடல் மீண்டும் மக்களிடம் ஹிட் ஆனது. அதனால் நான் அவர்களை வாழ்த்தினேன். பலரும் என்னிடம், அவர்கள் மீது வழக்கு போடுங்கள், பணம் கேளுங்கள் எனக் கூறினார்கள். ஆனால் எனக்கு அப்படி செய்யவே தோன்றவில்லை. அந்தப் பாடல் மீண்டும் ஹிட் ஆனதற்காக நான்தான் அவர்களுக்கு பணம் கொடுக்கவேண்டும் என எண்ணுகிறேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பாடல் மக்களிடையே மீண்டும் வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,” என பதிலளித்துள்ளார்.