நடிகை சாந்தினி தமிழரசன், தனது இயல்பு நடிப்பால் ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். பள்ளி கல்விக்காலத்திலேயே சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர், “சினிமாவில் புதியவர்களுக்குப் பொறுமை மிகவும் அவசியமானது. தங்கள் திறமையை நம்பிக்கையுடன் வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்கிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த சாந்தினி, பள்ளி படிப்பின் போது மிஸ் சென்னை அழகுப் போட்டியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால், இயக்குனர் பாக்யராஜ் அவரை ‘சித்து +2’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார். அப்போது பள்ளிக் பருவமாதலால் மேக்கப் போடுவது, கேமரா முன்னே நிற்பது, நடிப்பது போன்றவை எல்லாம் தெரியாத விஷயங்களாகவும், ஷூட்டிங் அனுபவம் புதியதும் பயமுறுத்துவதுமாக இருந்தது. ஆனால் தொடர்ந்த திரைப்படங்களில் வாய்ப்புகளைப் பெற்று நடிப்புத் திறமையை மேம்படுத்தியதால், இவை அனைத்தும் இயல்பாக மாறின.

புதிய படைப்புகளில் ஆர்வம் இருந்ததால், கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பாடப்பிரிவில் சேர்ந்தேன். ஆனால் தொடர்ந்து வந்த பட வாய்ப்புகளை ஏற்கும்போது கல்வி பாதிக்கப்படக்கூடாதென்ற காரணத்தால், நான்கு ஆண்டுகள் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அதன் பிறகு ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ படத்தில் மீண்டும் கதாநாயகியாக நடித்தேன். அப்போது தொடர்ச்சியாக நடித்து அதிகமாக சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கிருந்ததில்லை.
இதன் காரணமாக ஒவ்வொரு படத்திற்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டது. பின்னர் ‘வில் அம்பு’ படத்தில் ஹரிஷ் கல்யாணின் ஜோடியாக நடித்தேன். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதின் காரணமாக பல வாய்ப்புகள் வந்தது. வந்த வாய்ப்புகளை திறமையாக பயன்படுத்தியதால் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவேண்டும் என்ற விருப்பம் எனக்குள் பிறந்தது.
பள்ளி நண்பரையே காதலித்து பெற்றோரின் அனுமதியுடன் திருமணம் செய்தேன். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 50 படங்களில் கதாநாயகியாகவும், 10 படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளேன். ‘சுழல் 2’ எனும் வெப்சீரிஸிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தேன். சமீபத்தில் வெளியான ‘பெருசு’ படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த படத்தில் ஒரு கதாபாத்திரம் தொடக்கத்தில் அணிந்த ஆடை படம் முடியும் வரை மாற்றப்படாமல் நடித்தது.
ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியான மூன்று செட் உடைகள் வழங்கப்பட்டது. இந்த படம் 27 நாட்களில் படமாக்கப்பட்டது. அதிகமான ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் இருந்ததால் ஷூட்டிங் நேரம் ரொம்ப நேரம் சென்றது. தற்போது 10 படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு படத்தில் கண் தெரியாதவளாகவும், மற்றொரு படத்தில் ஆசிரியையாகவும் நடித்திருக்கிறேன். ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நல்ல காதல் கதைகள் கொண்ட, கதாநாயகன் போலவே முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க விருப்பம் என்கிறார் சாந்தினி.