கோவாவில் நடைபெறும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் தாதா சண்டை பின்னணி கதைக்களத்தில் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழில் மாதவனுக்கு ஜோடியாக ‘நளதமயந்தி’ படத்தில் கதாநாயகியாக நடித்த கீதுமோகன்தான் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்காக 45 நாட்கள் நீளமான ஆக்ஷன் மாரத்தான் ஷூட்டில் பணியாற்ற ‘ஜான் விக்’ புகழ் ஜே.ஜே. பெர்ரி இணைந்துள்ளார். இவர் ‘ஜான் விக், டே ஷிப்ட், பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

மும்பையில் இவரது தலைமையில் முக்கியமான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இக்காட்சிகள் படத்துக்கு மிகவும் முக்கியமானவை என்பதால், ஸ்டோரி போர்டுகள், துல்லியமான பயிற்சிகள், கலை தொடர்பான விவாதங்கள் போன்ற முறைகளின் மூலம் சண்டைக் காட்சிகளை மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்போகிறார்களாம்.
“என் 35 ஆண்டுகால அனுபவத்தில், 39 நாடுகளில் பணியாற்றியிருக்கிறேன். நான் இந்திய சினிமாவின் தீவிர ரசிகன். இந்திய சினிமா மிகுந்த படைப்பாற்றல், கலைநயம், துணிச்சல் கொண்டது. யஷ், கீதுமோகன் மற்றும் அவர்களின் அற்புதமான குழுவுடன் இணைந்து பணியாற்றுவது என் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணமாகும்” என்று பெர்ரி தெரிவித்துள்ளார்.இந்தப் படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் எடுக்கப்படுகிறது. மேலும், இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது. 2026 மார்ச் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது.