சமீபத்தில் பிரபலமான ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நடிகர் அஜித் குமாரிடம், ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் நடித்த F1 திரைப்படத்தில் வரும் சன்னி ஹெய்ஸ் என்ற கதாபாத்திரம் இறுதிக் காட்சியில் ரேஸிங்கில் வெற்றி பெற்று, பின்னர் அந்த இடத்தை விட்டு வெளியேறி, தனது மோட்டார் ஸ்போர்ட்ஸ் கனவை தொடர்ந்து மேற்கொள்வதற்காக கிளம்பிச் செல்லும் காட்சியை எடுத்துக்காட்டினர். கார் ஓட்டுவதே அவருக்கு ஒரு விதமான ஆனந்தமாக அமைவது போல் அந்தப் படம் முடிவடைகிறது. அதில் ஒரு இடத்தில் சன்னி ஹெய்ஸிடம், பணத்துக்காக கார் ஓட்டவில்லை என்றால், எதற்காக கார் ஓட்டுகிறீர்கள்? என்று கேட்கும் உரையாடல் வரும். அதேபோல், நீங்கள் எதற்காக கார் ஓட்டுவது மற்றும் ரேஸிங்கில் கவனம் செலுத்துவது? என்ற கேள்வி அஜித்திடம் எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், Pushing the limits நான் ஒரு கட்டத்துக்குள் அடங்கிவிட விரும்பவில்லை. எனது எல்லைகளைக் கடந்து, எனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் எனக்குள் இருக்கிறது. ரேஸிங் மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் எனக்கு மிகவும் பிடித்தவை. அதனால் தான் அதை இப்போது முழுமையாகச் செய்து கொண்டிருக்கிறேன். கார் ரேஸிங்கில் ஒவ்வொரு முறை போட்டியிடும் போதும், நமது எல்லைகளைக் கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் வரும் அதுதான் Pushing the limits என்பதன் அர்த்தம். ஒரு சிறிய தவறு செய்தால்கூட பெரிய விளைவுகள் ஏற்படும். அதனால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இவையெல்லாம் வாழ்க்கைக்கும் பல முக்கியமான பாடங்களை கற்றுத் தருகின்றன. உண்மையில், எல்லா விளையாட்டுகளும் வாழ்க்கையைப் பற்றிய ஒரு புதிய பார்வையைத் தருகின்றன. எனவே எல்லாரும் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்று நான் நம்புகிறேன். அது வாழ்க்கையை இன்னும் அழகாகவும் முழுமையாகவும் வாழ உதவும். விளையாட்டில் ஈடுபடுவது ஒரு தியானம்போல் உணரப்படக் கூடும்” என்று கூறினார்.
மேலும் அவரிடம், நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டாராக சினிமாவில் பெரும் புகழுடன் வாழ்ந்துவிட்டு, இப்போது ரேஸிங்கில் எந்த உதவியாளர்களும் இல்லாமல் உங்கள் வேலைகளை நீங்களே செய்து வருகிறீர்கள். ஒரு சிறிய அறையில் உடை மாற்றுகிறீர்கள், சமைக்கிறீர்கள், பெரிதாக எந்த வசதிகளும் இல்லாமல் வாழ்கிறீர்கள். இவ்வாறு வசதியான வாழ்க்கையை அனுபவித்துவிட்டு மீண்டும் எல்லாவற்றையும் தானாகச் செய்துகொள்வது எப்படி இருக்கிறது? எனக் கேட்கப்பட்டது.
அதற்கு அஜித் பதிலளித்தபோது, “நான் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். சினிமா வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் நான் பல கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்திருக்கிறேன். அப்போது எனக்குத் தானே என் வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். எந்த உதவியாளர்களும் இல்லை, எந்தவொரு பெரிய வசதிகளும் இல்லை. வசதியான வாழ்க்கை எனக்கு அதன் பிறகுதான் வந்தது. எனக்காக உதவியாளர்கள் வந்த பிறகு, நிச்சயமாக எனக்கு நேரம் மிச்சமானது. ஆனால் காலப்போக்கில் எல்லாவற்றிற்கும் அவர்களைப் பற்றியே நம்பிக்கை வைக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். அது மிகவும் ஆபத்தானது.
இப்போது நான் என் வேலைகளை மீண்டும் நானே செய்துகொள்கிறேன். எல்லாவற்றையும் நானே செய்வதை நான் மனமார ரசிக்கிறேன். உங்களைச் சுற்றி அதிகமானவர்கள் இருந்தால், வாழ்க்கை சிக்கலாகிவிடும். அதனால் முடிந்தவரை சுயமாக இருப்பதே நல்லது என்று நான் நம்புகிறேன். இப்போது நான் மீண்டும் என் குழந்தைப் பருவ கால நிலைக்குத் திரும்பியுள்ளேன் என்று சொல்லலாம். எனது வாழ்க்கையை மீண்டும் ஒரு புதிய கட்டத்தில் இருந்து தொடங்குகிறேன். நானாகச் சமைத்துக்கொள்வது, நானே என் வேலைகளைப் பார்த்துக்கொள்வது போன்றவை பெரிய விஷயமாக தோன்றாது — ஆனால் எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றன. பொதுவாக மக்கள் எல்லாரும் இப்படித்தான் வாழ்கிறார்கள். நானும் அப்படித்தான் வாழ விரும்புகிறேன்” என்று உண்மையுடன் பகிர்ந்துள்ளார்.

