நடிகை சாயாதேவி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: “நான் 14 வயதிலிருந்து சினிமாவில் நடித்து வருகிறேன். கதாநாயகியாக அறிமுகமான ‘கன்னிமாடம்’ திரைப்படம் எனக்கு சினிமா உலகத்தில் நல்ல பெயரை ஏற்படுத்தி வைத்தது. பின்னர் ‘டி.எஸ்.பி.’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் தங்கையாகவும், அதன் பின்னர் ‘சார்’ படத்தில் கதாநாயகியாகவும் நடித்தேன். என் தந்தை பிரபல இயக்குநராக (யார் கண்ணன்) இருக்கிறதாலும், என் தாயார் (ஜீவா) நடனக் கலைஞராக இருப்பதாலும் சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தது.

ஆனால், திரைப்படத்தில் முதன்முதலாக நடித்த அனுபவம், நாளடைவில் காதலாக மாறி, சினிமாவுக்காக அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. சினிமாவை நோக்கி வளர்ந்திருந்தாலும், முதல் நாள் கேமரா முன் நின்றபோது ஒருவகையான பயம் இருந்தது. அந்த பயத்தைத் தாண்டி தற்போது தொடர்ந்து கற்றுக்கொண்டு நடித்து வருகிறேன்.அண்மையில் வெளியான ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் நடித்ததற்குப் பிறகு எனக்கு அரசியல், மதம் தொடர்பான விழிப்புணர்வு பெரிதும் ஏற்பட்டது. இப்படத்தின் நோக்கம் மத உணர்வுகளை தூண்டி யாரையும் புண்படுத்துவது அல்ல; மதச் சார்பற்ற தேசமாக இந்தியா இருக்க வேண்டும் என்ற உணர்வை ஊக்குவிப்பதாகும்.
இப்படத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக இருப்பது எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் சென்றதும் தான் தெரிந்தது. அவர் எப்போதும் ஒரு கல்லூரி நண்பரைப் போல பழகுவார். தனது அருகில் இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பவர் என்பதால், படப்பிடிப்பு இடத்தில் அனைவரும் ஜாலியாக இருந்தார்கள்.‘மாமன்’ திரைப்படத்தில் நடிகர் சூரியுடன் நடிக்கும் வாய்ப்பு வந்ததும், அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆவலால், கதாபாத்திரம் குறித்து எதுவும் கேட்கவில்லை. படம் எடுத்துக் கொண்டிருந்தபோதே தான், அவருடைய கதையின் முன்னாள் காதலியாக நடிப்பதை அறிந்தேன். அவருக்காக, எந்த சந்தேகமும் கேட்காமல் நடித்து முடித்தேன்.
6 வயதிலிருந்து 6 ஆண்டுகள் பரதநாட்டியம் மற்றும் அதன் பிறகு கதகளி கற்றேன். பொதுவாக, நடனத்தில் திறமையான நடிகைகளுக்குப் பெரும்பாலும் சினிமாவில் அத்திறமையை வெளிக்கொணரும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை எனச் சொல்வார்கள். ஆனால், எனது நடன திறனை வெளிக்கொணரும் சரியான வாய்ப்பு ஒருநாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்,” என்றார்.