பிரபல பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷன் நடித்த 2006ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹீரோ படம் ‘கிரிஷ்’ ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக இதற்கான அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகின. கடைசியாக ‘கிரிஷ் 3’ என்ற மூன்றாம் பாகம் 2013ஆம் ஆண்டு வெளிவந்தது.

‘கிரிஷ் 3’ படம் வெளியாகி தற்போது 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இந்தத் தொடரின் அடுத்த பாகமான ‘கிரிஷ் 4’ எப்போது உருவாகும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துவருகிறது. இதற்கிடையே, ஹிருத்திக் ரோஷன் தான் இந்த ‘கிரிஷ் 4’ படத்தை நடிப்பதுடன் இயக்கவும்கூட திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதை பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும், படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டில் தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘கிரிஷ் 4’ படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் ஆதித்யா சோப்ரா இணைந்து தயாரிக்க உள்ளனர். இந்த படம் சுமார் ரூ.700 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பைட்டர்’. இந்தப் படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடித்திருந்தார். இயக்குநராக சித்தார்த் ஆனந்த் பணியாற்றியிருந்தார். அனில் கபூர் கூட ‘பைட்டர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுவரை வெறும் நடிகராக மட்டுமே பணியாற்றிய ஹிருத்திக் ரோஷன், தற்போது ‘கிரிஷ் 4’ மூலம் இயக்குநராக களமிறங்கவுள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.