சென்னை ஹை கோர்ட் நீதிபதியாக இருக்கும் சோனியா அகர்வாலிடம், ஒரு இளம் பெண் சம்பந்தப்பட்ட சொத்து வழக்கு வருகிறது. அந்த வழக்கில் ஏதாவது ஆள்மாறாட்டம் நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தில், அவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்ராந்தை அந்த வழக்கை பற்றி விசாரிக்க சொல்லுகிறார். விக்ராந்த் பல இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தும்போது, ஹீரோயினாக வரும் அலக்கியா யார், அவர் பின்னணி என்ன, அந்த சொத்துடன் அவருக்கு என்ன தொடர்பு போன்ற விஷயங்கள் வெளிச்சத்துக்கு வருகிறது. அந்த வழக்கின் முடிவில் நீதிபதி என்ன தீர்ப்பு அளிக்கிறார், அலக்கியாவுக்கு நியாயம் கிடைக்கிறதா என்பதே “வில்” படத்தின் கதை. ‘வில்’ என்றால் ‘உயில்’ என்பதைக் குறிக்கிறது. இப்படத்தை எஸ். சிவராமன் இயக்கியுள்ளார்.

சோனியா அகர்வால் ஒரு வழக்கை விசாரிப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. சென்னையில் வசிக்கும் ஒரு வயதான தொழிலதிபர், தனது சொகுசு பிளாட்டை ஒரு இளம் பெண்ணுக்கு எழுதி வைக்க வேண்டிய காரணம் என்ன? அந்த பெண் யார் என்பதை விக்ராந்த் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதன் மூலம் கதை சுவாரஸ்யம் பெறுகிறது. நீதிபதி கெடப்பில் சோனியா அகர்வால் பக்காவாக பொருந்தியிருக்கிறார். அவரின் பாடி லாங்குவேஜ், வசன உச்சரிப்பு அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது. பல கிளோஸ்-அப் ஷாட்ஸ்களில் அவரின் சிறிய எக்ஸ்பிரஷன்களும் படம் முழுவதும் பிளஸாக இருக்கிறது. குறிப்பாக, கோர்ட் சீன்கள் வழக்கமான சினிமா பாணியில் இல்லாமல் இயல்பாக எடுத்திருப்பது கதையை இன்னும் ரசிக்க வைக்கிறது.
ஹீரோயினாக வரும் அலக்கியா ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த பெண். அப்பாவின் பணப்பிரச்சனையால் அவர் வேறு பாதைக்கு தள்ளப்படுகிறார். ஒரு வயதான பணக்காரருடன் அவருக்கு உருவாகும் உறவும், அதில் ஏற்படும் மாற்றங்களும் கதைமாந்திரத்தில் புதிய முயற்சியாக தெரிகிறது. சில சோகமான, எமோஷனல் காட்சிகளில் அலக்கியாவின் நடிப்பு மனதில் பதிகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் சீனில் அவர் நடிப்பு கண்கலங்க வைக்கிறது.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வரும் விக்ராந்தின் விசாரணை ஓகே ரகமாக இருந்தாலும், அவர் இன்னும் சிறப்பாக நடிக்கக் கூடிய இடம் இருந்திருக்கலாம் என தோன்றுகிறது. வயதான பணக்காரராக பதம் வேணுகுமார் நடித்துள்ள கேரக்டர் வித்தியாசமாக இருந்தாலும், குடும்ப பிரச்சனை சீன்களில் நாடகத்தனம் அதிகம் தெரிகிறது. அலக்கியாவின் திருமண வாழ்க்கை மற்றும் அதனைச் சார்ந்த சம்பவங்கள் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. ஹீரோயினைச் சுற்றிய ஹோம் கேர் காட்சிகள் சில இடங்களில் நீளமாக உணரப்படுகிறது. அந்த வயதான பணக்காரரின் குடும்பம் மற்றும் சித்தூர் பகுதிக்கான சீன்களில் ஈர்ப்பு குறைவு தெரிகிறது. மேலும், அவர் ஏன் மாறினார் என்பதற்கு திரைக்கதையில் வலுவான காரணம் இல்லை.
பணத்திற்காக ஒரு பெண் எதையும் செய்யக்கூடியவர் என்ற கோணத்திலிருந்து சில சீன்கள் எழுதப்பட்டுள்ளன. அதற்கு நியாயம் சொல்லும் சீன்களும் கொஞ்சம் பிற்போக்கான மனப்பான்மையை காட்டுகின்றன. சில இடங்களில் பெண்களை தவறாக காட்டும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. அலக்கியா குடும்பத்தின் நிதி பிரச்சனைகள் மற்றும் 7 லட்சம் கடன் பற்றிய சீன்களில் போதிய தீவிரம் இல்லை. இப்படத்துக்கு சோனியா அகர்வாலின் தம்பி சௌரப் அகர்வால் இசையமைத்துள்ளார். ஆனால் அக்கா படம் என்றாலும் அவர் அதிக உழைப்பை காட்டவில்லை என தோன்றுகிறது. “டெஸ்லா” பாடல் மட்டும் சுமாராக அமைந்துள்ளது. கோர்ட் மற்றும் மலைப்பகுதி காட்சிகளில் ஒளிப்பதிவாளர் பிரசன்னாவின் வேலை நன்றாக இருந்தது என்பதைக் குறிப்பிடலாம்.