Touring Talkies
100% Cinema

Wednesday, September 10, 2025

Touring Talkies

‘வீர தீர சூரன்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மதுரையில் மிகப்பெரிய ரவுடிகளாக வலம்வரும் சூரஜ் வெஞ்சரமூடு மற்றும் அவரது தந்தை மாருதி பிரகாஷ்ராஜ் இருவரும் ஒரு பெரும் சிக்கலை எதிர்கொள்கிறார்கள். இவர்களது பழைய எதிரிகள் காரணமாக, ஊர் திருவிழா நடைபெறும் நேரத்தில் இந்த இருவரையும் என்கவுண்டர் செய்யும் திட்டத்தை போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யா தீவிரமாக வகுக்கிறார்.

இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க, அந்த ஊரில் அமைதியாக ஒரு மளிகை கடையை நடத்தி வாழ்ந்து வரும் விக்ரமிடம் உதவிக்காக விரைகிறார் மாருதி பிரகாஷ்ராஜ். ஒழுங்கான வாழ்க்கையை பின்பற்றி வரும் விக்ரமும் உதவுவதற்கு சம்மதிக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில், எஸ்.ஜே.சூர்யா மற்றும் மாருதி பிரகாஷ்ராஜ் இருவரிடமும் சிக்கிக்கொண்டு பெரும் சோதனைக்கு ஆளாகிறார். விக்ரமின் குடும்பத்தினரைக் கொலையிலான விளையாட்டுக்குப் பயன்படுத்தி, இரு தரப்பினரும் ஆடுபுலி ஆட்டம் ஆடுகின்றனர்.மாருதி பிரகாஷ்ராஜ் குடும்பத்தின் மீது எஸ்.ஜே.சூர்யாவுக்குள்ள விரோதம் என்ன? விக்ரமின் கடந்த காலம் என்ன? ரவுடிகள் கூட நடுங்கும் அளவிற்கு அவனது பிதற்றலான வரலாறு என்ன? இறுதியில் யார் யாரை வீழ்த்துகிறார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.

வழக்கமான நடுத்தர குடும்ப மனிதனாக, யதார்த்தமான நடிப்பால் விக்ரம் ரசிகர்களை கவர்கிறார். ஆனால் அதே நேரத்தில், அவர் காட்டும் அதிரடி திருப்பங்கள் அவரது இன்னொரு முகத்தை வெளிக்கொணர்கின்றன. பக்கா கமர்ஷியல் ஹீரோவாக அனைத்து பந்துகளிலும் சிக்ஸர் அடிப்பதுபோல் வியக்க வைக்கிறார் சீயான். ஆர்ப்பாட்டம் இல்லாத தன்மையுடன் துஷாரா விஜயன் தனது நடிப்பால் ரசிக்க வைக்கிறார். காதல் காட்சிகளில் அழுத்தமான பங்களிப்பு வழங்கியுள்ளார். விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் நடிக்கும் திருமண காட்சிகள் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன.

வன்மமிக்க நடிப்பால், எஸ்.ஜே.சூர்யா ரசிகர்களிடையே பயத்தை ஏற்படுத்துகிறார். அவரது நடிப்பு இப்படத்தின் மிக முக்கிய பலமாக திகழ்கிறது. தனது மகனை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லும் மாருதி பிரகாஷ்ராஜும், உயிரைக் காப்பாற்ற ஓடும் சூரஜ் வெஞ்சரமூடும் வில்லாதாரங்களாக மிரட்டுகிறார்கள். பாலாஜி, ரமேஷ் இந்திரா, மாலா பார்வதி, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட எல்லா நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களில் உயிரூட்டியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளரான தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு படத்துக்கே உயிரூட்டியுள்ளது. சண்டை காட்சிகளில் ஒளிக்கோணங்களை நாலாபுறமும் மாற்றி வியக்க வைத்திருக்கிறார். ஆக்ஷன் ரசிகர்களுக்கென இதுவொரு அதிரடி விருந்து. ஜி.வி. பிரகாஷின் இசை நம்மை ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையிலும் அதே அளவிற்கு செம்ம லெவல். பிளாஷ்பேக் காட்சிகளின் நீளமும், இரண்டாம் பாதியில் வேகக் குறைவும் படத்தின் பலவீனங்களாக இருந்தாலும், உயிரோட்டமான திரைக்கதை அதனை சிறப்பானதாகவே காட்டுகிறது. வீர தீர சூரன் உண்மையாகவே வீரமான தீரமான சூரனான ஒருவன் தான்.

- Advertisement -

Read more

Local News