Friday, February 7, 2025

‘தண்டேல்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரை விமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாக சைதன்யாவும் சாய் பல்லவியும் சிறுவயதில் இருந்தே காதலிக்கின்றனர். ஒரு சமயத்தில் நாக சைதன்யாவும் 22 மீனவர்களும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராத புயல் காரணமாக அவர்களின் பாதை தடுமாறி, பாகிஸ்தான் நாட்டின் எல்லைக்குள் நுழைந்து விடுகிறார்கள். இதன் விளைவாக, பாகிஸ்தான் கடற்படை அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறது. இதற்கிடையில், சாய் பல்லவி மற்றும் கருணாகரன் ஆகியோரின் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? நாக சைதன்யா சிறையிலிருந்து வெளிவந்தாரா? என்பதே இந்த படத்தின் கதையாக உருவாகிறது.

2019ஆம் ஆண்டு ஆந்திராவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், மீனவர்களின் வாழ்க்கைத் துயரத்தை பிரதிபலிக்கிறது. நாக சைதன்யா உண்மையான மீனவராகவே வாழ்ந்துள்ளார்போல், அவர்களின் உடல் மொழி, நடை, உடை மற்றும் பாவனைகளை மிகத் தெளிவாகவும் நம்பிக்கையூட்டும்படியாகவும் படம் பிடித்துள்ளார். சாய் பல்லவியின் கதாபாத்திரம் பல மீனவ பெண்களின் எண்ணங்களையும் வாழ்வியல் உண்மைகளையும் பிரதிபலிக்கின்றது. காதலனிடம் காட்டும் பாசம், தனது வாழ்க்கைக்காக மேற்கொள்ளும் போராட்டம் ஆகியவற்றில் அவரது நடிப்பு கதாபாத்திரத்திற்கு உயிர்ப்பூசுகிறது.

மேலும், கருணாகரன், ஆடுகளம் நரேன் மற்றும் மீனவர்களாக நடித்துள்ள மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் கொண்டு சென்றுள்ளனர். பல ஆண்டுகளாக மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை மையமாக வைத்து, உண்மை சம்பவத்தையும் சேர்த்துச் சொல்லும் விதத்தில் இயக்குனர் சந்து மொண்டேட்டி இப்படத்தை உருவாக்கியுள்ளார். திரைக்கதையில் எந்தவிதமான இடைவெளியும் இல்லாமல், தொடர்ச்சியாக கதையை சுவாரஸ்யமாக நகர்த்தியுள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் தத்துவ பாடல் பெரும் பாராட்டை பெற்றிருக்கிறது. பின்னணி இசையும் மிகச் சிறப்பாக இருக்கும். ஒளிப்பதிவாளர் ஷயாம் தத், அரபிக்கடலையும் மீனவ கிராமங்களையும் கண்கொள்ளாகக் கேமராவில் பதிவு செய்துள்ளார்.

மீனவர்களுக்கு தொடர்ந்து ஏற்படும் பிரச்னைகளை நேர்மறையான கோணத்தில் விவரிக்கும்போதே, சமகால அரசியல் நிகழ்வுகளையும் இதில் இணைத்துச் சொல்லிய விதம் பாராட்டுக்குரியது. ஆக மொத்தத்தில் படம் சிறப்பே.

- Advertisement -

Read more

Local News