இந்தியாவை காப்பாற்றும் நோக்கத்தில், 1947ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய அமைப்பு ‘ரெட் பிளவர்’. சரியாக 100 ஆண்டுகளுக்குப் பிறகு, 2047ஆம் ஆண்டு மால்கம் டைனஸ்டி என்ற அமைப்பால் இந்தியாவுக்கு ஆபத்து வரும்போது, ‘ரெட் பிளவர்’ என்ன செய்கிறது என்பதே இந்தக் கதையின் மையம். அந்த நேரத்தில் இந்தியா எவ்வாறு முன்னேறியுள்ளது, மால்கம் டைனஸ்டி ஏன் இந்தியாவை தாக்க முற்படுகிறது, வரி கட்ட வேண்டுமென மிரட்டும் அந்த அமைப்பினருக்கு ‘ரெட் பிளவர்’ அமைப்பின் வீரர் விக்னேஷ் எவ்வாறு பதிலடி கொடுக்கிறார் என்பதே இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கிய ‘ரெட் பிளவர்’ படக்கரு.
ஹாலிவுட் திரைப்படத்துக்கு ஒப்பாக எடுத்துவிட வேண்டும் என்ற ஆசையுடன் இயக்குநர் பணியாற்றியுள்ளார். 2047ஆம் ஆண்டை மையமாகக் கொண்டதால், படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகள், துப்பாக்கி, விமானங்கள், செயற்கைக் கோள்கள், நவீன ஆயுதங்கள், உயர் தொழில்நுட்ப அலுவலகங்கள், சமகால கட்டிடங்கள் என கண்கவர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கற்பனைக்கும், முயற்சிக்கும் இயக்குநரை பாராட்டலாம்; ஒளிப்பதிவாளரின் உழைப்பையும் குறிப்பிடலாம். ஆனால், எல்லாவற்றிலும் சரியான ஒத்திசைவு இல்லை; கிராபிக்ஸ் தரம் குறைவாக இருந்தது, மேலும் அதன் நிறத்தோணும் திருப்தி அளிக்கவில்லை.
சின்னதாய், ‘ராமன் அப்துல்லா’ படங்கள் மூலம் அறிமுகமான விக்னேஷ், இந்தப் படத்தில் ஹீரோவாக அண்ணன், தம்பி என இரு வேடங்களில் நடித்துள்ளார். அண்ணன் – நாட்டுப்பற்று மிக்க உளவு பிரிவு அதிகாரி; தம்பி – அந்த உணர்வுக்கு முற்றிலும் மாறாக, அண்ணனை கொன்று, அவரது காதலியைப் பெற நினைக்கும் அபாயகரமானவன். இரு வேடங்களிலும், முந்தைய படங்களின் பாணியின்றி நடித்துள்ளார்; குறிப்பாக, தம்பி வேடத்தில் அதிக தீவிரத்துடன் நடித்திருந்தாலும், கதை முழுவதும் அவர் நடிப்போடு சரியாக பொருந்தவில்லை. சில நேரங்களில் ஓவர் ஆக்டிங் இருந்தது.
கதைக்குள் வந்தால் – மால்கம் டைனஸ்டி அமைப்பின் தலைவர் தலைவாசல் விஜய், இந்தியாவை அழிக்க நினைக்கும் சர்வாதிகாரி; வரி கேட்டு மிரட்டுபவன். அப்போது இந்தியாவின் பிரதமராக ஒய்.ஜி. மகேந்திரன், ராணுவ தளபதியாக நாசர், இளம் பெண் ஜனாதிபதி ஆகியோர் உள்ளனர். தலைவாசல் விஜய்யுடன், சுரேஷ் மேனன் உட்பட பல வில்லன்கள்; நிழல்கள் ரவி, மோகன்ராம், அஜய் ரத்னம் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஆனால் எந்தக் கதாபாத்திரமும் மனதில் பெரிதாக பதியவில்லை என்பது உண்மை.
படம் முழுவதும் வில்லன்களின் ஆட்கள் பெண்களை பாலியல் வன்முறை செய்து கொடுமைப்படுத்துவது, எதிரிகளை சுட்டுக்கொல்வது போன்ற வன்முறை காட்சிகள் நிரம்பியுள்ளன. அதிலும், பல வெளிநாட்டு பெண்களை இந்திய பெண்களாகக் காட்டியுள்ளனர். இடையிடையே பாடல் என்ற பெயரில் கவர்ச்சி நடனங்கள். கதை மத்தியில் தலைவாசல் விஜய் மிரட்டல்கள் விடுவார். இதற்கிடையில், கொல்லப்பட்டதாக நினைக்கப்பட்ட அண்ணன் மீண்டும் வருகிறார்; அவர் தேசப்பற்று கொண்டு, இந்தியாவை அழிக்க வரும் ஏவுகணைகளை அழிக்கிறார்; தம்பிக்கு பாடம் புகட்ட முயல்கிறார். ஆனால், இதற்கான செயற்கைக்கோள் தொடர்புகள், கட்டளைகள் போன்றவை படத்தோடு கலந்து செல்லவில்லை. வன்முறைகள் மிகுதியான நிலையில், சில இடங்களில் சிவகுமார் புகைப்படங்கள் வருவது தனிப்பட்ட விசயம்.
இறுதியில், வில்லன்களின் திட்டத்தையும், அவர்களையும் அழிக்கும் ‘ரெட் பிளவர்’ வீரர்களின் நாட்டுப்பற்றை பாராட்டி, நேதாஜியின் வீரத்தையும், தேசிய சிந்தனையையும் காட்டுகிறார்கள். படத்தில் சிறப்பாக அமைந்த காட்சி இதுவே.