நிறங்கள் மூன்று திரைப்படம் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும் தனித்தனியாக நகர்ந்து, பின்னர் ஒன்று சேர்ந்து முடிவுக்கு வரும் ஒரு திரைக்கதை அமைப்பு கொண்ட படம் இது. கதை சுவாரஸ்யமாக நகர்ந்தாலும், அதில் காட்சிகள் நெகிழ்வோ அல்லது தீவிரமாக ஆவலூட்டுவதாக இல்லாமல், ஒரு நேரடி நடைமுறையிலேயே படத்தின் நகர்ச்சி தொடர்கிறது.
துஷ்யந்த், பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர். அவருடைய ஆசிரியரான ரகுமானின் மகள் அம்மு அபிராமியை காதலிக்கிறார். ஒருநாள் அதிகாலை டியூஷனுக்குச் சென்ற அம்மு அபிராமி காணாமல் போகிறார். அம்முவைத் தேடும் முயற்சியில் துஷ்யந்தும், ரகுமானும் தனித்தனியாக ஈடுபடுகிறார்கள். இதற்கிடையில், ஒரு சிலமா இயக்குநராக வெற்றி பெற வேண்டும் என்ற கனவில் இருக்கும் அதர்வாவின் கதையை, ஒரு பிரபல இயக்குநர் திருடி படமாக்க முயற்சிக்கிறார். அதனைத் தடுக்க அதர்வா மற்றும் அவரது நண்பர்கள் போராடுகிறார்கள். இன்னொரு பக்கம், லஞ்சம் வாங்கும் இன்ஸ்பெக்டராக உள்ள சரத்குமாருக்கும், அரசியல்வாதியின் மகன்களுக்கும் இடையிலான மோதலும் ஒரு தனி கதையாக நகர்கிறது. இறுதியில், துஷ்யந்த், ரகுமான், அதர்வா மற்றும் சரத்குமார் ஆகியோரின் பாதைகள் எப்படி ஒன்றாக இணைகிறது என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கும் இளைஞராக அதர்வா நடித்துள்ளாராம். ஆனால், அவரை எப்போதும் போதையில் இருப்பவராகவும், போதைப் பொருட்களுடன் தொடர்புடையவராகவும் காட்டுவது தேவையற்ற ஒன்றாக தெரிகிறது. இந்த யூடியூப் யுகத்தில் சினிமா இயக்குநராக வேண்டும் என கனவு காண்பவர்கள் அதிகம் உள்ளனர். ஆனால், “போதையில் இருந்தால்தான் படைப்பாற்றல் உருவாகும்” என வசனத்தின் மூலம் இளைஞர்களுக்கு தவறான ஆலோசனையை இயக்குநர் கார்த்திக் நரேன் வழங்குகிறார். இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதர்வா சம்பந்தப்பட்ட போதைப் பொருள் காட்சிகள், அவர் ஒரு பிரபல இயக்குநரிடம் வெறுப்பாக இருப்பதை காட்டும் காட்சிகள் எல்லாமே இயக்குநரால் மிகுந்த ஆர்வத்துடன் உருவாக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. இது யாரின் மீதுள்ள கோபத்தைப் பிரதிபலிக்கிறது தெரியவில்லை.

மாணவர்களுக்குப் பிடித்தமான நல்ல ஆசிரியராக ரகுமானை காட்டியுள்ளார். மகளை இழந்த தந்தையாக வருத்தப்படவும், அமைதியான ஒரு ஆளுமையாகவும் அவரின் கதாபாத்திரம் வெளிப்படுகிறது. ஒருவரின் வெளித்தோற்றத்தை அல்லது செயலைப் பொறுத்தே அவரை நம்புவது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு அவர் ஒரு உதாரணமாக இருக்கிறார்.

சரத்குமார், ஒரு லஞ்சம் வாங்கும் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். அவர், அமைச்சருக்கும் அவரது மகன்களுக்கும் எதிராக தனது அதிகாரத்தினை பயன்படுத்தி சரியான பாடம் புகட்ட முயற்சிக்கிறார். இதன் மூலம் அவரது கதாபாத்திரத்திற்கு ஒரு தாக்கத்தை உருவாக்கியுள்ளார். மற்ற கதாபாத்திரங்களுடன் ஒப்பிடும்போது, அவரின் காட்சிகள் குறைவாகவே இருக்கும். ஆனால், வருகிற காட்சிகளில் அவர் தனது அனுபவத்தின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறார். அதர்வா சம்பந்தப்பட்ட போதைப் பொருள் காட்சிகளை மிகுந்த விரிவாகக் காட்டுவதைத் தவிர்த்திருக்கலாம். கதை முன்னேறாமல், மெதுவாக நகர்வது படத்தின் மொத்த சுவாரஸ்யத்தை குறைக்கிறது.