இஞ்சினியரிங் கல்லூரியில் படித்த போதே லாஸ்லியாவைக் காதலித்தவர் ஹரிபாஸ்கர். ஆனால், அவரது காதலை ஏற்க மறுக்கிறார். நான்கே வருடத்தில் லாஸ்லியாவைக் காதலிக்க வைக்கிறேன் என சபதமெடுக்கிறார். நான்கு வருடங்களுக்குப் பிறகு பணத் தேவைக்காக ஹவுஸ்கீப்பிங் வேலை ஒன்றிற்கு செல்கிறார் ஹரிபாஸ்கர். அவர் வேலைக்குச் செல்லும் வீடு லாஸ்லியா வீடு. ஆறு மாதங்கள் அவரது வீட்டில் வேலை செய்ததில் லாஸ்லியாவின் ‘பாய் பெஸ்ட்டி’ ஆகிறார் ஹரி. அதைக் காதல் என தவறுதலாக புரிந்து கொள்கிறார் ஹரி. பின்னர் ஹரிக்கு தன் அலுவலகத்திலேயே வேலை வாங்கித் தருகிறார் லாஸ்லியா. இதனிடையே, தன்னுடன் வேலை பார்க்கும் ராயன்-ஐத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார் லாஸ்லியா. இதனால், ஹரிக்கும், ராயனுக்கும் இடையே சண்டை நடக்கிறது. ஒரு பெண்ணுக்காக இருவரும் அடித்துக் கொள்கிறார்கள். இதற்கான முடிவு என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இப்போது வரும் பல இளம் இயக்குனர்களுக்கு திரைக்கதையை ஒரு கோர்வையாக, தொடர்ச்சியாக எழுதத் தெரியவில்லை. ஒரு கதையை யோசித்துவிட்டு திரைக்கதையில் ஏதேதோ காட்சிகளை சேர்க்கிறார்கள். இந்த வாரம் வெளியான படங்களில் இது போன்ற குறைகளுடன் பார்க்கும் இரண்டாவது படம் இது. மணிகண்டன் நடித்து வெளிவந்த ‘குடும்பஸ்தன்’ படத்திலும் இதே சிக்கல்தான். திரைக்கதையை சரியாக எழுதியிருந்தால் இந்த இரண்டு படங்களுமே இன்னும் பேசப்பட்டிருக்கும். யு டியுப் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் போல சினிமாவுக்கும் யோசிப்பதுதான் இதற்குக் காரணம்.
அறிமுக நாயகன் ஹரிபாஸ்கர் பல நடிகர்களை ‘இமிடேட்’ செய்து நடிக்கிறார். திடீரென கமல் போல பேசுகிறார், ரஜினி போல உடல்மொழியைக் காட்டுகிறார். கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தினாலும் மற்ற நடிகர்களைப் போல இமிடேட் செய்வது தேவை இல்லாதது. நகைச்சுவையும், உணர்வுபூர்வமான நடிப்பும் இயல்பாகவே வருகிறது. மற்றவர்களைப் போல செய்யாமல் தனக்கான பாணியை செய்ய முயற்சிப்பது அவரது எதிர்காலத்துக்கு நல்லது.
லாஸ்லியா அதற்குள்ளாகவே இவ்வளவு இளைத்துவிட்டார். முகத்தில் கூட ஒரு பொலிவு இல்லாமல் ‘டல்’ ஆகக் காணப்படுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தது போல இல்லை. இரண்டு காதலர்களுக்கு நடுவில் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரம். இருந்தாலும் நடிப்பில் குறை வைக்கவில்லை. லாஸ்லியாவைக் காதலிக்கும் மற்றொரு காதலராக ராயன். ஹரியின் அப்பாவாக இளவரசு, அம்மாவாக உமா ராமச்சந்திரன் வழக்கம் போல யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். ஹரியின் காதல் ஆலோசகராக ஷா ரா. நகைச்சுவைக்கு பல இடங்கள் இருந்தாலும், அதற்கான வசனங்கள் இடம் பெறவில்லை.
காதல் படங்களில் பாடல்கள் சிறப்பாக அமைய வேண்டும். இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட் அதைச் செய்யத் தவறிவிட்டார். அதோடு ஒவ்வொரு காட்சியிலும் இசைத்துத் தள்ளி அந்தக் காட்சிகளின் தாக்கத்தை ரசிக்கவிடாமல் செய்திருக்கிறார். பின்னணி இசை என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். குலோத்துங்கவர்மன் ஒளிப்பதிவு வீடு, அலுவலகம், தெருக்கள் என இயல்பாக அமைந்துள்ளது. பாய் பெஸ்ட்டி, லிவிங் டுகெதர், லவ் யு, ஐ லவ் யு என இந்தக் காதலத்துக் காதல் யார் யாரால் எப்படி புரிந்து கொள்ளப்படுகிறது என சொல்ல வந்திருக்கிறார்கள்.