வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு வரும் கல்யாணி தனியாக வீடு எடுத்து வாழ ஆரம்பிக்கிறார். அவர் பகலில் அதிகம் வெளியில் செல்லாமல், இரவு நேரங்களில் மட்டும் வேலைக்குச் சென்று திரும்புகிறார். கல்யாணியின் எதிர்புற பிளாட்டில், தனது நண்பர்களுடன் தங்கி வரும் கல்லூரி மாணவர் நஸ்லேன், அவரை பார்த்ததும் காதலிக்கிறார். அதே சமயம் நகரத்தில் மனித உறுப்புகளுக்காக மக்கள் கடத்தப்படுகின்றனர். அந்த கடத்தல் கும்பலில் ஒருவரை, ஒரு சம்பவத்தில் கல்யாணி அடித்து காயப்படுத்துகிறார். இதனால், அந்த கும்பல் அவர்களது அடுத்த கடத்தல் பட்டியலில் கல்யாணியையும் சேர்த்து கடத்த முயற்சிக்கிறது.
அப்போது கல்யாணி தனது விஸ்வரூபத்தை எடுத்துக்கொண்டு, தன்னை கடத்தியவர்களில் இருவரையும் கொல்கிறார். அந்த நேரத்தில், கல்யாணியை பின்தொடர்ந்து வந்த நஸ்லேன் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அப்போது தான் கல்யாணி ஒரு மோகினி (யட்சி) என்பது நஸ்லேனுக்கு தெரிகிறது. இந்த உண்மையை யாரிடமும் சொல்லாமல், தன்னிடம் இருந்து விலகிச் செல்லும்படி நஸ்லேனை எச்சரிக்கிறார் கல்யாணி.
இதற்கிடையில், போலீஸ் அதிகாரி சாண்டி, நகரத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் கல்யாணி கொன்றவர்களைப் பற்றிய விசாரணையில் ஈடுபடுகிறார். அந்த விசாரணையின் போது கல்யாணியின் மீதான சந்தேகம் அதிகரிக்கிறது. அவர் அளித்த தகவலின் பேரில், கல்யாணியையும், நஸ்லேனையும், அவரது நண்பர்களையும் தீவிரவாதிகளாக சித்தரித்து சுட்டுக் கொல்லும் முயற்சியில் போலீஸ் படை களம் இறங்குகிறது. இந்த மோதலில் கல்யாணியின் தாக்குதலுக்கு ஆளான சாண்டியும், கல்யாணியைப் போலவே டிராகுலா சக்திகளைப் பெறுகிறார். இதன் பின்னர் இருவருக்குள் கடும் மோதல் ஏற்படுகிறது. இதில் யார் வெற்றி பெறுகிறார்கள், கல்யாணி போலீசாரிடமிருந்து எப்படி தப்பிக்கிறார், தன்னால் சிக்கலில் சிக்கவைக்கப்பட்ட நஸ்லேனை அவர் காப்பாற்றுகிறாரா என்பது கதைத் தொடர்ச்சி.
இந்த படம் ஆரம்பத்திலிருந்தே சூப்பர் உமன் கதையம்சத்துடன் வெளிவரும் என்கிற செய்திகள் வெளியானதால், பார்வையாளர்கள் ஆர்வத்துடன் சென்றனர். ஆனால் திரையில் அது சூப்பர் உமன் கதை அல்ல, மோகினி (யட்சி) கதை என்று தெரிய வந்ததும், ஒரு சிறு ஏமாற்ற உணர்வு ஏற்பட்டது. ஹீரோ, மாநாடு போன்ற படங்களில் பார்த்த கல்யாணி இப்படி மாறுபட்ட உருவத்திலும், நடிப்பிலும் பிரமிக்க வைப்பது ஆச்சரியமாக இருந்தது. படத்தில் அதிகம் பேசாமல், உடல் மொழியால் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார். பெரும்பாலும் கடினமான முகத்தோடு முழு படத்திலும் தோன்றியதோடு, வலுவான ஆக்ஷன் அவதாரத்திலும் நடித்துள்ளார். சொல்லப்போனால் பிளாஷ்பேக்கில் வரும் வரலாற்றுக் காட்சிகளைத் தவிர, படம் முழுவதும் கல்யாணி மயமாக இருந்தது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளில், பிரபல ஆக்ஷன் ஹீரோக்களுக்கு நிகராக சண்டையிட்டுள்ளார்.
படத்தின் விறுவிறுப்புக்கு துணையாக இருந்தவர்கள் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி. குறிப்பாக, படம் துவங்கிய முதல் அரைமணி நேரம் வரை கதை வெளிநாட்டில்தான் நடக்கிறது என நம்ப வைக்கும் அளவுக்கு அழகாக காட்சிகளை உருவாக்கியிருந்தார் நிமிஷ் ரவி. பின்னர் அது கேரளாவில் நடக்கிறது என்பது வெளிப்பட்டதும் வியப்பு ஏற்படுகிறது. இதனுடன் கலை இயக்குநரின் பங்களிப்பும் பாராட்டத்தக்கதாக இருந்தது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்த சாண்டி, முழுநீள வேடத்தில் அதுவும் மலையாளத் திரையுலகில் தனது முதல் முயற்சியை எடுத்துள்ளார். போலீஸ் அதிகாரியின் வேடத்தில் அவர் நன்றாக பொருந்தியிருந்தார். ஆனால் தனது மேலதிகாரிகள்மீதும், சாதாரண மக்கள்மீதும் கோபப்படுவதால் அவர் நல்லவரா, கெட்டவரா என்ற குழப்பத்தை ஆரம்பத்தில் ஏற்படுத்துகிறார். இருப்பினும், புதுமையான கதை, தொடர்ச்சியான திருப்பங்கள், விறுவிறுப்பான காட்சிகள் ஆகியவற்றால் படம் போரடிக்காமல், அனைவரையும் கவரும் வகையில் கதையை அமைத்துள்ளார் இயக்குனர்.