‘குமாரசம்பவம்’ படத்தின் கதை சினிமாவில் டைரக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் அலைந்து திரியும் ஹீரோ குமரனைச் சுற்றி நடக்கிறது. அவரது வீட்டின் மாடியில் தங்கியிருக்கும் சமூக சேவகர் குமாரவேல் திடீரென இறந்துவிடுகிறார். அது கொலைவா என்ற சந்தேகத்தில் போலீஸ் விசாரணை தொடங்குகிறது. தன்னையும் சந்தேகிக்கிறார்கள் என்பதால் குமாரவேலின் எதிரிகளைத் தேடி விசாரிக்கிறார் ஹீரோ. இதற்கிடையில் தாத்தா ஜி.எம். குமார் எழுதிய உயிலை நிறைவேற்றும் முயற்சியும் சிக்கலாகிறது. இதனால் ஹீரோவின் டைரக்டர் ஆகும் ஆசை தள்ளிப்போகிறது. குமாரவேல் எப்படி இறந்தார்? ஹீரோ டைரக்டர் ஆனாரா? என்பதே கதையின் மையம். லக்கிமேன் படத்தை இயக்கிய பாலாஜி வேணுகோபால் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

‛பாண்டியன் ஸ்டோர்’ மூலம் பிரபலமான குமரன் ஹீரோவாக அறிமுகமாகிறார். சினிமாவில் வாய்ப்பு தேடும் இயக்குனராக அவர் வரும் கதைப் பாத்திரத்தில், தாத்தாவை வீட்டை விற்று பணம் தரச் சொல்வதும், மறுபுறம் குமாரவேல் மரணத்துக்குக் காரணமான வில்லனை நகைச்சுவையோடு தேடும் காட்சிகளும் இடம்பெறுகின்றன. நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார் குமரன். குறிப்பாக பாலசரவணனுடன் சேர்ந்து நடிக்கும் காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. மூன்று வில்லன்களைத் தேடி செல்லும் சம்பவம் தரமாக அமைந்துள்ளது.
சமூக சேவகராக குமாரவேல் முக்கியமான கேரக்டரில் வருகிறார். அனுபவம் காரணமாக சீரான நடிப்பை அளித்திருந்தாலும், பல படங்களில் பார்த்த பழைய பாணி தான். அவரின் மரண சம்பவம் மட்டும் வித்தியாசமாக அமைய, கிளைமாக்ஸை சற்று சுவாரஸ்யமாக்குகிறது.சிபிஐ அதிகாரியாக வினோத் சாகர் அரை மணி நேரத்திற்கு மேல் படத்தை உயிரோட்டமாக நகர்த்துகிறார். மாறுவேடங்களில் வில்லன்களை விசாரிக்கும் விதம் சிறப்பாக அமைந்துள்ளது. படத்தின் முக்கிய பிளஸ் அந்த விசாரணை காட்சிகளே. ஹீரோ மாமாவாக வரும் வினோத் முன்னாவும் சிரிப்பு வரவழைக்கிறார். ஆனால் காமெடி போலீசாக சிவா ஆனந்த் செயற்கையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஹீரோயினாக பாயல் ராதாகிருஷ்ணன் சில காட்சிகளில் மட்டும் தோன்றி காணாமல் போகிறார். தாத்தாவாக ஜி.எம். குமார் தனது அனுபவத்துடன் நடித்து தள்ளியுள்ளார். அம்மா, தங்கை போன்ற கதாபாத்திரங்கள் சீரியல் பாணியில் இருந்து சலிப்பை தருகின்றன. ஹீரோவின் எக்ஸ்பிரஷனிலும் இன்னும் வளர்ச்சி தேவை. அச்சு ராஜாமணியின் கர்நாடக சங்கீதம் பின்னணி இசையில் பீல் குட் தருகிறது. ஜெகதீஷின் கேமரா வேலை ஓகே. காமெடி டயலாக்கள் சில இடங்களில் சிரிப்பை தருகின்றன. ஆனால் கதை சொல்லும் பாணி, சமூக போராளி கேரக்டர், போலீஸ் விசாரணை எல்லாமே பழையது போல் தெரிகிறது.
இடைவேளைக்குப் பின் படம்தான் சூடுபிடிக்கிறது. குறிப்பாக வில்லன்கள் மீது சந்தேகப்பட்டு சிபிஐ அதிகாரி விசாரிக்கும் காட்சிகள், அதற்கிடையில் வரும் காமெடி சம்பவங்கள் நன்றாக வேலை செய்கின்றன. படம் முழுக்க இப்படிப்பட்ட சம்பவங்கள் இருந்தால் தரமாக இருந்திருக்கும். ஆனால் மெதுவாக நகரும் முற்பாதி, வலுவற்ற திரைக்கதை காரணமாக படம் திணறுகிறது. குமாரவேல்–ஜி.எம். குமார் நட்பு தெளிவாக சொல்லப்படவில்லை. சமூக சேவகர் கேரக்டர் ட்ரையாக தோன்றுகிறது. நாடக பாணியில் காட்சிகள் அதிகமாகவும், பலரும் நாடக நடிகர்களைப் போலவே நடித்திருப்பதும் மைனஸ். எமோஷனல், சென்டிமென்ட் சீன்கள் வேலை செய்யவில்லை. மொத்தத்தில், பாண்டியன் ஸ்டோர் குமரன் நடிப்பில் ஒரு சராசரி கதையுடன், சில காமெடி சீன்கள், டயலாக்களால் மனதில் நிற்கும் படம் தான் குமாரசம்பவம்.