கொடைக்கானலில், ஜான்சி என்ற நாய் தனது குட்டியுடன் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. அப்போது, அதற்கெதிரே ஒரு குடிகாரக் கும்பல் காரை ஓட்டி, நேரடியாக அதன் குட்டிக்கு மேல் ஏற்றி, கொன்று விட்டு பறந்து செல்கிறது. இதை கண்ட தாய் நாய் துயரத்துடன் குரைத்துக்கொண்டு, அந்தக் காரை துரத்திச் செல்கிறது. பின்னர், தன்னுடைய குட்டிக்கு நீதி கேட்டு நேராக காவல் நிலையத்தை அடைகிறது. ஆனால் அங்கு காவலர்கள் அதை விரட்டியடிக்கின்றனர்.
நியாயம் கிடைக்காததால், அது வழக்கறிஞர் எஸ்.ஏ. சந்திரசேகர் வீட்டுக்கு செல்கிறது. ஆனால் அங்கும் காவலாளி அதை விரட்டிவிட, தொடர்ந்து மீண்டும் மீண்டும் வந்து பார்க்கிறது. இதனை கவனித்த எஸ்.ஏ. சந்திரசேகர், நாய் ஏதோ தன்மீது சொல்வதற்காகவே வந்திருக்கிறது என்பதை உணர்கிறார். வாயில்லா ஜீவனான அந்த நாய், தன் துயரத்தை உணர்த்த முயற்சிக்கிறது. அதன் கோபத்தையும், வேதனையையும் புரிந்துக்கொண்ட எஸ்.ஏ. சந்திரசேகர், நாயின் சார்பாக நீதிமன்றத்திற்குச் சென்று வாதாடுகிறார்.இந்த வழக்கை விசாரிக்க நீதிபதியாக ஓய்.ஜி. மகேந்திரன், எதிர் தரப்பின் வழக்கறிஞராக பாலாஜி சக்திவேல் செயல்படுகிறார்கள். இந்த வினோதமான வழக்கில் நடந்தது என்ன? அந்த நாய் எப்படி நேராக காவல் நிலையத்திற்கும், வழக்கறிஞர் வீட்டிற்கும் சென்றது? அந்தக் குட்டியை கார் ஏற்றி கொன்றது யார்? இறுதியில், அந்த நாய்க்கு நீதிமன்றத்தில் நியாயம் கிடைத்ததா? என்பதுதான் படத்தின் மீதி கதை.
‘கூரன்’ என்றால் கூர்மையான புத்தி கொண்டவன் என்று பொருள். இந்தப் படத்தின் கதாநாயகன் (நாய்) மிகுந்த புத்திசாலித்தனமாக செயல்படுவதால், படத்திற்கு ‘கூரன்’ என தலைப்பு வைத்துள்ளனர்.ஒரு நாயின் உணர்வுகளை திரையரங்கில் பார்வையாளர்களுக்கு எப்படிக் காட்ட முடியும்?” என்ற கேள்வி ஏற்படலாம். ஆனால் படம் தொடங்கியவுடன், தொடர்ந்து வரும் காட்சிகள் மூலம், அதற்கான பதிலை இயக்குனர் நிதின் வேமுபதி சிறப்பாக வழங்குகிறார்.ஒரு நாய் இத்தனை அறிவுடன் செயல்படுமா? என நாம் யோசிக்கும்போதே, அதற்கான முன்னணி காரணங்களை இன்டர்வல் பிளாக்கில் வெளிப்படுத்துகிறார். இதுவே இரண்டாம் பாதியில் மிகவும் சுவாரஸ்யமான பிளாஷ்பேக்காக விரிகிறது. இப்படியில், ஒரு நாயை கதையின் மையப்புள்ளியாக கொண்டு, படத்தை உருவாக்கிய இயக்குனர் நிதின் வேமுபதிக்கு பாராட்டுகள்.
வழக்கறிஞர் தர்மராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள எஸ்.ஏ. சந்திரசேகர், மிகவும் இயல்பாக நடித்துள்ளார். இவர் முன்பு நடித்த படங்களை ஒப்பிடும்போது, இந்தக் கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது.
நாயின் மீது காரை ஏற்றி கொன்ற ரஞ்சித் ராஜாவின் தந்தையாக நடித்துள்ள கவிதா பாரதி, தனது வழக்கமான வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வழக்கறிஞராக நடித்துள்ள பாலாஜி சக்திவேல், தனது வசனங்களால் மற்றும் நடிப்பால் பார்வையாளர்களை ஈர்க்கிறார்.
கண்பார்வையற்றவராக நடித்துள்ள ஜார்ஜ் மரியான், பொதுவாகவே நாய்களுக்கு பார்வை இருக்கும் என்ற கருத்தை நம்ப முடியாது என்ற கேள்விக்கு சிறப்பான பதில் அளிக்கிறார். அதேபோல, நாயின் குரைப்பு ஒலியை, ஏ.ஐ (AI) தொழில்நுட்பம் மூலம் மொழிபெயர்க்கும் நபராக நடித்துள்ள சத்யன், தனது பங்கினை நகைச்சுவையுடன் செய்து ரசிகர்களை கவருகிறார்.எஸ்.ஏ. சந்திரசேகர் கதாபாத்திரத்திற்குத் துணையாக நடிக்கும் இந்திரஜா, சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக செயல்பட்ட மார்டின் தன்ராஜ், கொடைக்கானல் மற்றும் மலைப்பிரதேசக் காட்சிகளை, மிகவும் அழகாக படம் பிடித்துள்ளார். இருந்தாலும், ஒரு நாய் பற்றிய கதையாக அமைந்தாலும், அதன் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக பின்னணி இசையை சித்தார்த் விபின் மிகத் திறமையாக வழங்கியுள்ளார். அதுமட்டுமல்ல, படத்தில் இடம்பெற்ற பாடல்களும் நன்கு ரசிக்கும்படியாக அமைந்துள்ளன.