தொழிலதிபர் அமித் எஸ்டேட்டில், குதிரை பயிற்சியாளராக ஸ்ரீகாந்த் பணிபுரிந்து வருகிறார். அதேபோல், பெரிய கோடீஸ்வரராக இருக்கும் சச்சுவின் இல்லத்தில், புஜிதா பொன்னாடா வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் சந்திக்கின்றனர். அந்த சந்திப்பின் போது, தங்களது உண்மையான அடையாளத்தை மறைத்து, பணக்காரர்களாக நடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் ஏமாற்றுகிறார்கள்.
இந்த சூழலில், இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து, உறவு நிச்சயதார்த்தத்திற்குச் செல்கிறது. அதன் பிறகு, இவர்கள் ஏமாற்றியதாக கூறிய அந்த முதலாளிகளின் வீட்டிலேயே, அவர்களின் பொய்கள் அம்பலமாகிறது. இதன் பின்னர், இவர்கள் காதல் தொடர்ந்ததா? ஒன்றாக இணைந்தார்களா? என்றதே கதையின் மீதிப் பகுதி.
தமிழ் சினிமாவில் பலமுறை பார்த்து சலித்துபோன “பொய்யாக பணக்காரர்கள் போல நடித்த காதல்” கதையை, இயக்குநர் கே. ரங்கராஜ் திரைக்கதையாக மாற்றியுள்ளார். ஆனால், இதில் புதிய விஷயங்களை சேர்த்து, சுவாரசியமாக சொல்லியிருந்தால், படம் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். அத்தனை அனுபவம் இருந்தும், ஏன் இப்படியான பழமையான கதையை எடுத்தார் என்பது புரியவில்லை.
அதேபோல், முன்பு ஹீரோ மார்க்கெட்டில் இருந்த ஸ்ரீகாந்த், தற்போது தனது பழைய இடத்தை பிடிக்க பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால், இதுவரை அவர் வெற்றி பெறவில்லை. இனியாவது, நல்ல கதைக்களம் மற்றும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்தால், திரையுலகில் நீடிக்க முடியும்.இதேபோல், நாயகி புஜிதா பொன்னாடா, திரையில் அழகாக தோன்றினாலும், நடிப்பில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இரண்டாவது ஹீரோ, ஹீரோயினாக நடித்த பரதன் மற்றும் நிமி இமானுவேல், தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளனர்.
இவர்களோடு, பார்கவ், நம்பிராஜன், நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன் ஆகியோரின் காட்சிகள் படத்திற்கு மேலுமொரு உயிர்ப்பு கொடுத்துள்ளன. மேலும், பழம்பெரும் நடிகர்கள் கே.ஆர். விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, தங்களது அனுபவ நடிப்பை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.படத்தில், நடிகர்கள் பலர் இருக்கின்றனர் என்பதோடு, ஒளிப்பதிவாளர் உதவியாலேயே படம் ரசிக்க முடிகிறது என்பது படத்தின் ப்ளஸ் பாயிண்ட் ஆகிறது.