பிசியோதெரபி மருத்துவரான பாலாஜி முருகதாஸ் காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள். இந்த மிஸ்ஸிங் கேஸை இன்ஸ்பெக்டர் ஜே. எஸ். கே (ஜே சதீஷ் குமார்) விசாரிக்கிறார். விசாரணையின் போது, ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான் ஆகியோரை ஏமாற்றி, அவர்களுடன் நேரம் கழித்து, அதை வீடியோ மூலம் மிரட்டி பணம் பறித்தது தெரிய வருகிறது. மேலும், பல பெண்களையும் அவர் ஏமாற்றிய விவரங்கள் வெளிவருகின்றன.
இந்தநிலையில், அமைச்சரான சிங்கம் புலி, பாலாஜி முருகதாஸை உடனடியாக கண்டுபிடிக்கும்படி இன்ஸ்பெக்டர் ஜே.எஸ்.கே மீது அழுத்தம் செலுத்துகிறார். அதன்பிறகு நடந்தது என்ன? பாலாஜி முருகதாஸுக்கு உண்மையில் என்ன நேர்ந்தது? அமைச்சர், அவருடன் எவ்வாறு தொடர்புடையவர்? என்பதே படத்தின் மீதி கதை.

பாலாஜி முருகதாஸ், காசி என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில் முழுமையாக பொருந்தி நடித்திருக்கிறார். தனது வசீகர உடலால் பெண்களை ஈர்த்து, தனக்குத் தேவையானவற்றை சாதித்துக்கொள்ளும் விதத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.பாதிக்கப்பட்ட பெண்கள் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான் ஆகிய நான்கு பேரும் தாராள கவர்ச்சி காட்டி, அந்தக் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்துள்ளனர்.

துப்பு துலக்கும் இன்ஸ்பெக்டராக ஜே.எஸ்.கே, எஸ்ஐயாக சுரேஷ் சக்கரவர்த்தி, அமைச்சராக சிங்கம் புலி ஆகியோர் தங்கள் வேடங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஜே.எஸ்.கே திரைக்கதை எழுதி, இயக்கியுள்ளார். சமூக அக்கறை கொண்ட கதையை தனது முதல் படத்திலேயே நேர்மையாக எடுத்துக்காட்டியுள்ளார்.

டி. கே. இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன, பின்னணி இசையும் சராசரியாக உள்ளது. சதீஷ். ஜி ஒளிப்பதிவில் காட்சிகள் மிக அழகாக உள்ளன. பெண்களை துஷ்பிரயோகம் செய்யும் மனிதர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த “ஃபயர்” படம் வெளிவந்துள்ளது.