ஒரு மாம்பழச் சாறு தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் கெமிஸ்ட்ரியனாக பணியாற்றி வரும் சதாசிவம் சின்ராஜ், அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சாய் தன்யாவை காதலித்து திருமணம் செய்கிறார். காதல் காலத்தில் புல்லட் மோட்டார் சைக்கிளை, திருமணத்திற்கு பிறகு தனது மனைவிக்காக கார் மற்றும் விலை உயர்ந்த செல்போனை மாத தவணை (EMI) முறையில் வாங்குகிறார். எதிர்பாராதவிதமாக வேலை இழந்ததால் அவர் வாங்கிய கடனுக்கான மாதத் தவணைகளை செலுத்த முடியாமல் போகிறது. இதனால் பைனான்ஸ் நிறுவனத்தினர் அழுத்தம் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். பணத்தை வசூலிக்க கடும் முயற்சி மேற்கொள்ளும் அடியாட்கள் அவரை தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்குகிறார்கள். அந்த சிக்கல்கள் மற்றும் அவமானங்களைச் சுற்றி இப்படத்தின் மீதிக்கதை அமைந்துள்ளது.
இன்றைய காலத்தில் பணம் இல்லையென்றாலும் EMI வழியாக பொருட்களை வாங்கும் நிலை நடுத்தர மக்களிடம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையை மையமாக கொண்டு, சம்பளத்தில் நம்பிக்கை வைத்து பொருட்கள் வாங்கும் நடத்தை, தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு கடன் சுமையைச் சுமக்கும் மக்களின் நிலை, பைனான்ஸ் நிறுவனங்களின் கையாளும் முறை உள்ளிட்டவை பற்றி இயக்குனர் சதாசிவம் சின்ராஜ் பேசுகிறார். மாத தவணை அடிப்படையில் கடன் வாங்கி சீரழியும் குடும்பங்களின் வேதனைகளையும், துயரங்களையும் சமூக விழிப்புணர்வாக வெளியிடுகிறார். மேலும், இப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் சதாசிவம் சின்ராஜ்.
தனது முதல் படத்திலேயே இயக்குனராகவும், கதாநாயகனாகவும் செயல்பட்டுள்ள சதாசிவம் சின்ராஜ், ஒவ்வொரு காட்சியிலும் இது ஒரு தொடக்க முயற்சி என்பதைக் காட்டுகிறார். அவருக்கு இன்னும் சிறு அளவு நடிப்பு பயிற்சி தேவைப்படுவதை உணர முடிகிறது. அவரது மனைவியாக நடித்துள்ள சாய் தன்யா, காதல் காட்சிகளிலும், கிளைமாக்ஸ் பகுதியில் வழங்கிய இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்துள்ளார். வங்கி ஏஜென்டாக நடிக்கும் ஆதவன் திறமையாக நடித்துள்ளார். பிளாக் பாண்டி நண்பனாக சில காட்சிகளில் காமெடி செய்ய முயற்சி செய்தாலும், அது சற்றே சோர்வை ஏற்படுத்துகிறது.
சாய் தன்யாவின் தந்தையாக சில காட்சிகளில் தோன்றும் இயக்குநர் பேரரசு, குறைந்தபட்ச காட்சிகளிலும் கவனம் பிடிக்கிறார். லொள்ளு சபா மனோகர், ஓ.ஏ.கே. சுந்தர், செந்தி குமாரி ஆகியோர் நடிப்பும் ஓகே ரகமாக அமைந்துள்ளது. இசையமைப்பாளர் ஸ்ரீநாத் பிச்சை இன்னும் சிறிது முயற்சி எடுத்திருக்கலாம். ஒளிப்பதிவாளர் பிரான்சிஸ் ரசிக்கும்படி ஒளிப்பதிவு செய்தாலும், புதுமை ஏதுமில்லை. கிரெடிட் கார்டு மூலம் தேவையற்ற பொருட்கள் வாங்கி, ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் நடுத்தர குடும்பங்களுக்கு இந்த படம் ஒரு கண்டிப்பான எச்சரிக்கை. ஆனால் இதே கதையை 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்திருந்தால், இன்னும் அதிகம் ரசிக்கப்பட்டிருக்கும். இன்று மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்கின்றனர்.