வடசென்னையின் கடலோரப் பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படும் ஒரு திட்டம் தொடங்கப்படுகிறது. அந்தத் திட்டம் தங்களது வாழ்வாதாரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி அங்குள்ள மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்தச் சூழலில், சாய்குமாரின் இரு நண்பர்கள் உயிரிழக்கின்றனர். அதற்கு பின், கச்சா எண்ணெயை திருடி விற்று, அதிலிருந்து கிடைக்கும் பணத்தை மீனவ மக்களின் நலனுக்காக பயன்படுத்தி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கிறார் சாய்குமார்.

காலப்போக்கில், அந்தச் செயலில் அவர் வளர்ச்சியடைந்து, பெட்ரோல் பங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவராக உயர்கிறார். சாய்குமாரின் வளர்ப்பு மகனாகிய ஹரிஷ் கல்யாண், கச்சா எண்ணெயை சட்டப்படி சரியான முறையில் பிரித்தெடுத்து தனியார் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி, அங்கிருந்து தயாராகும் பெட்ரோல் மற்றும் டீசலை மீண்டும் பெட்ரோல் பங்குகளுக்கு விநியோகிக்கும் வேலையை கவனிக்கிறார்.
இந்நிலையில், இவர்களுக்கு போட்டியாக வரும் விவேக் பிரசன்னா, சாய்குமாரின் பெட்ரோல் மற்றும் டீசல் லாரிகளில் இருந்து பாதி அளவு எடுத்து கலப்படமாக மாற்றுகிறார். இதற்கு போலீஸ் அதிகாரியான வினய் ஆதரவளிக்கிறார். இதை ஹரிஷ் கல்யாண் கண்டுபிடிக்கிறார். அவர் இதுகுறித்து கேட்கும் போது, விவேக் பிரசன்னா, “நானும் குழாயிலிருந்து எண்ணெய் எடுக்க அனுமதி வேண்டும்” என்று கேட்பதால் இருவருக்கும் இடையே மோதல் உருவாகிறது. இதன் விளைவாக வினயும் ஹரிஷ் கல்யாணும் இடையே சண்டை ஏற்படுகிறது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஹரிஷ் கல்யாண் தலைமறைவாகிறார்.
இதற்கிடையில், வினயும் விவேக் பிரசன்னாவும் இணைந்து கச்சா எண்ணெயை தங்களுக்காக எடுக்க சதி திட்டங்களை தீட்டுகின்றனர். இதை அறிந்த ஹரிஷ் கல்யாண் கடைசியில் எவ்வாறு அவர்களை எதிர்கொண்டு தன் வழியில் கையாள்கிறார், மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் பிரச்சனையை எவ்வாறு தீர்க்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை ஆகும். இந்த மாஸ் ஆக்ஷன் திரைக்கதையில் ஹீரோவுக்கான தேவையான அனைத்து அம்சங்களையும் ஹரிஷ் கல்யாண் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சாய்குமார் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வினய் வில்லத்தனத்தால் திரையில் மிரட்டுகிறார். விவேக் பிரசன்னா, சச்சின் கடேகர், கருணாஸ், ரமேஷ் திலக் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை துல்லியமாக செய்து முடித்துள்ளனர். அதுல்யாவும் தன் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றபடி நம்பிக்கையூட்டும் நடிப்பை வழங்கியுள்ளார்.
மீனவர்களின் வாழ்வாதாரம், கச்சா எண்ணெய் அரசியல், மீன்பிடி சிக்கல்கள் போன்ற முக்கியமான தலைப்புகளை ஒரே கதையில் இணைத்து இயக்குனர் சண்முகம் முத்துசாமி கையாண்டுள்ளார். ஒரே படத்தில் பல பிரச்சனைகளை சித்தரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் முதல் பாதி வடசென்னை படத்தையும், இரண்டாம் பாதி கத்தி படத்தையும் நினைவூட்டுகிறது. திரைக்கதையில் சில இடங்களில் வேகம் குறைந்தாலும், சில இடங்களில் அதேசமயம் வேகமான திருப்பங்களும் காணப்படுகின்றன. ஆனால், கதைமுழுவதும் பல தார்க்கிகப் பிழைகள் வெளிப்படையாகத் தெரிகின்றன.