காளகம்மாய்பட்டி என்ற கிராமம் இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டது. காரணம் – ஜாதி, கடவுள் பிரச்னை. கம்மாப்பட்டி மக்கள் தங்களை உயர்ந்தவர்கள் என நினைத்து, தனி குலதெய்வத்தை வழிபடுகிறார்கள். அவர்களால் ஒடுக்கப்படும் காளப்பட்டி மக்களும் தனி குலதெய்வத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த பகுதியில் தீண்டாமை கொடி கட்டிப் பறக்கிறது. இதை சமாதானப்படுத்த அரசு அதிகாரிகள் வந்தாலும், அவர்களை விரட்டியடிக்கும் அளவுக்கு பிரிவினை வலுப்பெற்றுள்ளது.

ஆனால், கம்மாப்பட்டியைச் சேர்ந்த காளி வெங்கடுக்கும், காளப்பட்டியைச் சேர்ந்த அர்ஜூன்தாசுக்கும் நட்பு மலர்கிறது. ஊரின் பழக்கவழக்கத்திற்கு மாறான இந்த நட்பு கதையின் மையக்கருவாகும். திடீரென காளி வெங்கட் இறந்துபோக, அவரது உடலைத் தங்களுடைய தெய்வமாக இரு தரப்பினரும் வழிபடத் தொடங்குகிறார்கள். அவர்தான் எங்கள் சாமி என்ற கோஷத்தில் சண்டை வெடிக்கிறது. இதற்கிடையில், காளி வெங்கட்டின் பிணத்தை வைத்து இரண்டு ஊர்களையும் ஒற்றுமையாக்க வேண்டும் என முடிவு செய்கிறார் அர்ஜூன்தாஸ். அது நடந்ததா இல்லையா என்பதே ‘பாம்’ படத்தின் சுவாரஸ்யம்.
இறந்த பின்பும், சில உடல் வேதியியல் மாற்றங்களால், பாம் போடும் பிணம் போல காளி வெங்கட் காட்சியளிப்பது அவரை ஸ்பெஷல் ஆக்குகிறது. இதுவே படத்திற்கு பாம் என்ற தலைப்பைத் தந்துள்ளது. இயக்குனர் விஷால் வெங்கட்கிராமப்பின்னணியில், கடவுள் ஜாதி பிரச்னையை விழிப்புணர்வோடு சொல்லியுள்ளார் இயக்குநர். ஹீரோ அர்ஜூன்தாஸ் என்றாலும், இரண்டாவது ஹீரோவாக காளி வெங்கட் காட்சியளிக்கிறார். அவர் இறந்த பின் தான் கதை சூடுபிடிக்கிறது. உண்மையில், படத்தின் பெரும்பகுதி அவர் பிணமாகவே வாழ்கிறார் என சொல்லலாம்.
ஆக்ஷன், வில்லத்தனத்தில் பழக்கமான அர்ஜூன்தாஸ், இம்முறை அப்பாவியாகவும், ஊரை ஒன்றிணைக்க போராடும் நல்ல மனிதராகவும் நடித்துள்ளார். குறிப்பாக, கடைசி அரைமணி நேரத்தில் அவர் நடிப்பு பாராட்டத்தக்கது. ஹீரோயினாக வரும் ஷிவாத்மிகா குறைவான காட்சிகளிலேயே கிராமத்து பெண்ணாக மனதில் நிற்கிறார். அண்ணன் காளிவெங்கட்டின் பிணத்தை சுமக்கும் காட்சி மிகுந்த உணர்ச்சியை தருகிறது.
சிங்கம்புலி ஊர் தலைவராகவும், ஜாதி வெறி பிடித்தவராகவும் வந்தாலும், அந்த வேடம் அவருக்கு பொருந்தவில்லை. பாதிக்கப்பட்ட ஊர் தலைவராக விலங்கு ரவி சிறப்பாக பொருந்தியுள்ளார். அரசியல்வாதியாக நாசர், கலெக்டராக அபிராமி – இவர்களின் வேடங்களை ஏற்கனவே பல படங்களில் பார்த்துவிட்டதால் ஈர்ப்பு குறைவு. பூசாரியாக டிஎஸ்கே நன்றாகச் செய்துள்ளார். ஆனால், சிறப்பாக கவனிக்க வைக்கிறவர் சிறுவன் பூவையார். ஜாதி வெறியால் பாதிக்கப்பட்டு தவிக்கும் சிறுவனாக நடித்திருக்கும் அவர் சம்பந்தமான காட்சிகள் மிகுந்த உணர்ச்சியூட்டுபவையாக உள்ளன.