ஜெய், யோகி பாபு இருவரும் துபாயில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். ஜெய் மற்றும் பிரக்யா நக்ரா தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க, யோகி பாபு மற்றும் சாய் தன்யா தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. இதை தொடர்ந்து, ஜெய்யின் தந்தை சத்யராஜும், யோகி பாபுவின் தந்தை இளவரசுவும் தங்கள் பேரன்களுடன் ஊருக்கு வருமாறு அழைக்கின்றனர். இதனால், துபாயில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல சென்னை வரும் இந்த இரண்டு குடும்பங்களும், அவர்களின் உறவினர்கள் செய்த தவறினால் குழந்தைகள் இடம் மாறி விடுகின்றன. குழந்தைகள் மாறியதை அவர்களின் பெற்றோர்கள் அறியாமல் எப்படித் திருத்தினர்? இதில் ஏற்பட்ட குழப்பங்கள் என்ன? இறுதியில் குழந்தைகளை மீண்டும் மாற்றிக் கொண்டனரா? என்பதே கதை.
ஹீரோயிசம் இல்லாத கதையாக இருந்தாலும், ஒரு குழந்தையின் அப்பாவாக ஜெய் சிறப்பாக நடித்துள்ளார். மற்றொரு தந்தையாக யோகி பாபுவும் அவருக்கு சவாலாக நடித்துள்ளார். அதோடு, யோகி பாபுவின் கவுண்டர் வசனங்களும் பார்வையாளர்களை ரசிக்க வைக்கின்றன. இவர்களின் மனைவியர்களாக நடிக்கும் பிரக்யா நக்ரா மற்றும் சாய் தன்யா இருவரும் அவர்களது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர். குழந்தைகள் மாறிய நேரத்தில், தாய்மார்களின் வேதனையை உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

சத்யராஜ் மற்றும் இளவரசு இருவருமே தங்களது அனுபவத்தால் கதாபாத்திரங்களை அழுத்தமாக உயிர்ப்பிக்கின்றனர். கிங்ஸ்லி, ஆனந்தராஜ், ஸ்ரீமன், சிங்கம்புலி ஆகியோர் தங்களது வேடங்களை சரியாக செய்திருந்தாலும், படத்தில் போதுமான நகைசுவை இல்லை என்பதே குறை.

குழந்தைகள் மாற்றப்பட்டு ஏற்படும் பிரச்சனைகளை கதையாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் பிரதாப். ஆனால், குழந்தைகள் மாறுவது, குழந்தைகள் கடத்தப்படுவது போன்ற கதைகள் தமிழ் சினிமாவில் ஏற்கனவே அதிகம் வந்துவிட்டதால், படம் பிரம்மாண்டமான அனுபவத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதோடு, பெரிய நட்சத்திரங்கள் கொண்ட காமெடி குழுவை வைத்திருந்தும், ஒரு நல்ல நகைச்சுவை படத்தை இயக்குநர் உருவாக்காதது கவலையாக இருக்கிறது. டி. இமானின் இசையில், பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கின்றன. சாரதியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாக வெளிப்படுகின்றன.