‘அஸ்திரம்’ : ஊட்டியில் உள்ள பூங்காவில் ஒருவன் விசித்திரமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறான். இந்த சம்பவத்தை விசாரிக்க வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாம், அதன் பின்னணி சாதாரணமல்ல என்று உணர்கிறார். இந்த மர்மத்தைக் கண்டுபிடிக்க தீவிரமாக செயல்படுகிறார். அப்போது சென்னை உள்ளிட்ட மற்றொரு இடத்திலும் அதே மாதிரிப் பேட்டர்னில் தற்கொலைகள் நடைபெற்றுள்ள தகவலை அறிந்து, அந்த விவரங்களை மேலும் விசாரிக்க, தனது உயர் அதிகாரியிடம் அனுமதி கோருகிறார் ஷாம். அவர் அனுமதி வழங்கி, ஒரு காவலரை ஷாமுக்கு உதவிக்காக அனுப்புகிறார். தொடர்ந்து நிகழும் தற்கொலை சம்பவங்களைப் பற்றி விசாரணை நடத்தும் ஷாமுக்கு எந்த ஒரு துப்பும் கிடைக்காத நிலையில், அவரது பழைய கல்லூரி நண்பர் ஒருவர் அவரை சந்திக்கிறார்.
அந்த நண்பர், ஷாம் விசாரித்து வரும் தற்கொலை சம்பவங்கள் குறித்த இப்போதுவரை தெரியாத முக்கியமான தகவல்களை பகிர்ந்துவிட்டு, திடீரென்று அவர் மற்றும் அவரை தேடி அங்கு வரும் மற்றொருவர் இருவரும் ஒரே மாதிரியான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. இதையடுத்து, ஷாம் அந்த வழக்கில் இருந்து விலக்கப்பட்டு, அவரது உயர் அதிகாரியால் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார். ஆனால் பணியில் இல்லாதபோதிலும், தொடர்ந்து நடைபெறும் தற்கொலைகளும், அவற்றைச் சுற்றியுள்ள சில தடயங்களும், ஷாமை தேடி வந்து சேருகின்றன. இதில் ஏதோ தனிப்பட்ட தொடர்பு இருப்பதாக அவர் உணர்கிறார். இதனையடுத்து, அந்த மர்மத்தை முழுமையாக விளக்கிக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். இதிலிருந்து பரபரப்பான பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிப்படுகின்றன. அந்த உண்மைகள் என்ன? அந்த தற்கொலைகளுக்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? இறுதியில் அந்த வழக்கை ஷாம் தீர்த்து வைத்தாரா என்பதே மீதிக் கதையின் மையமாகிறது.
ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்றால், அதில் ஒரு வரலாற்றுப் பின்னணி கட்டாயம் இருக்கவேண்டும் என்கிற தகுதிக்கு ஏற்ப, ஜப்பான் மன்னனை மையமாகக் கொண்ட கதையுடன் விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கி, சுவாரஸ்யமான ஒரு கிரைம் த்ரில்லரை வழங்கியிருக்கிறார் இயக்குனர் அரவிந்த் ராஜகோபால். ஹீரோ மட்டுமன்றி, அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சமமாக முக்கியத்துவம் வழங்கி திரைக்கதை எழுதப்பட்டிருப்பது இந்த படத்தின் மிகப்பெரிய பலமாகும். பரபரப்பாக நகரும் திரைக்கதையின் இடைவேளை பகுதி வில்லன் குறித்த பெரிய துப்பை கொடுக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டு, அதனை தொடர்ந்து படம் இறுதிவரை சுவாரஸ்யமாக நகரும் வகையில் அமைத்திருக்கிறார் இயக்குனர், அவருக்கு பாராட்டுக்களே உரியது.
படத்தில் ஹீரோயிசம் காட்டாமல், ஒரு நிஜமான காவல்துறை அதிகாரியாகவே நடித்துள்ளார் ஷாம். அவரது உடல் மொழி, விசாரணை நடத்தும் நடைமுறை ஆகியவை அந்த கதாப்பாத்திரத்திற்கு மிகுந்த நம்பிக்கையையும் வலிமையையும் சேர்த்துள்ளது. நாயகியாக நடித்திருக்கும் நிரா, தன்னை ஒப்படைத்த வேலையை சிறப்பாக செய்து காட்டியுள்ளார். அதேபோல், போலீசாக ஷாமுடன் பணிபுரியும் நடிகரும், புதுமுகம் போலவே பங்களித்து, அவரது நடிப்பால் கவனம் ஈர்த்துள்ளார்.
மனநல மருத்துவராக நடித்த நிழல்கள் ரவி, காவல்துறையின் உயர் அதிகாரியாக நடித்த அருள் டி. சங்கர், ஜீவா ரவி மற்றும் ஜே.ஆர். மார்டின் ஆகியோர் தங்கள் வேடங்களில் ஒவ்வொன்றாக தங்களது பங்களிப்பை நேர்த்தியாக வழங்கியிருக்கின்றனர். இதனால், திரைக்கதைக்கு ஒரு கூடுதல் பலம் சேர்ந்திருக்கிறது. ஒளிப்பதிவாளராக கல்யாண் வெங்கட்ராமன் உருவாக்கிய காட்சிகள் மிகுந்த அழகையும் நேர்த்தியையும் கொண்டவை. இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி வழங்கிய பாடல்கள் மற்றும் பின்னணி இசை, கதைநடைக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.