Touring Talkies
100% Cinema

Friday, October 31, 2025

Touring Talkies

‘ஆர்யன்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு புகழ்பெற்ற டிவி டாக் ஷோ நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போது, பார்வையாளராக இருந்த செல்வராகவன் துப்பாக்கியை எடுத்துக் காட்டி அனைவரையும் மிரட்டுகிறார். சில விஷயங்களை வெளிப்படையாகச் சொல்லிவிட்டு, சிலரை கொலை செய்யப் போவதாக அறிவித்து, அங்கேயே தற்கொலை செய்து கொள்கிறார். ஆனால், அவர் கூறியபடி கொலைகள் நடக்கத் தொடங்குகின்றன. அந்த மர்மமான கொலைகளையும், செல்வராகவனின் பின்னணியையும் ஆராயும் பொலிஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். இறந்துபோன செல்வராகவன் உண்மையிலேயே இந்தக் கொலைகளைச் செய்கிறாரா? அது எப்படி சாத்தியமாகிறது? உண்மையில் அதை யார் செய்கிறார்? கொல்லப்படுபவர்கள் யார்? அவை நடக்கக் காரணம் என்ன? இதனை விஷ்ணு விஷால் கண்டுபிடிக்கிறாரா? என்பதே பிரவீன் கே இயக்கிய ஆர்யன் படத்தின் முக்கியக் கதை.

போலீஸ் கதைகள், துப்பறியும் திரில்லர்கள், சைக்கோ மிஸ்டரிகள் என்று ஏராளமான படங்கள் வந்துள்ள நிலையில், ஆர்யன் அந்த வரிசையில் சிறிது வித்தியாசமான முயற்சியாகத் தோன்றுகிறது. டிவி ஷோவில் தற்கொலை செய்யும் நபர், பின்னர் வீடியோ வழியாக “அடுத்ததாக இந்த நபரை கொலை செய்யப் போகிறேன்” என்று பொதுமக்களுக்கும் போலீசுக்கும் கிளூ கொடுத்துவிட்டு, அந்தக் கொலைகளை துல்லியமாகச் செய்கிறார். “இது எப்படி சாத்தியம்?” என்பதே கதையின் முக்கிய சஸ்பென்ஸ். இதை இயக்குனர் புத்திசாலித்தனமான திரைக்கதை, விறுவிறுப்பான திருப்பங்கள் மற்றும் பரபரப்புடன் நயமாக வடிவமைத்துள்ளார். கொலையாளியாக வரும் செல்வராகவனும், விசாரணை அதிகாரியாக வரும் விஷ்ணு விஷாலும் தங்கள் கதாபாத்திரங்களில் போட்டிப் போட்டி நடித்து இருக்கிறார்கள். டிவி ஷோ தொகுப்பாளினியாக ஹீரோயினாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார்; விஷ்ணு விஷாலின் மனைவியாக மானஸா சவுத்ரி தோன்றுகிறார்.

போலீஸ் அதிகாரியாக தனது கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளார் விஷ்ணு விஷால். ஆனால், வில்லனுடன் நேரடி மோதல், சவால் போன்ற அம்சங்கள் இல்லாதது சிறிது குறையாகத் தெரிகிறது. இருந்தபோதும் மாறுபட்ட திரைக்கதையில் கிளைமாக்ஸ் உட்பட சில முக்கியக் காட்சிகளில் அவர் நடிப்பு பாராட்டத்தக்கது. ஆனால் படம் முழுவதும் ஒரே சீரான முகபாவனையுடன் காணப்படுவது அவருக்கு சரியாக அமையவில்லை. அவருக்கும் மானஸா சவுத்ரிக்கும் இடையிலான காதல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்ட காட்சிகள் தேவையற்றதாகவும் கதையோடு பொருந்தாததாகவும் தோன்றுகின்றன. டிவி தொகுப்பாளினியாக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தன் நடிப்பு மற்றும் காஸ்ட்யூம் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

வில்லனாக வரும், இறந்த பின்னரும் கொலைகளை நிகழ்த்தும் செல்வராகவனின் கதாபாத்திரம் படத்தின் பெரிய பலமாகும். குறிப்பாக டிவி ஷோ காட்சிகளில் அவரது பேச்சு, முகபாவனை, இயல்பான நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால் அதன் பிறகு அவர் திரையில் பெரிதாகத் தோன்றுவதில்லை; அவ்வப்போது வீடியோவில் மட்டுமே தோன்றுகிறார். பொதுவாக சைக்கோ வில்லன்கள் தங்கள் செயல்களால் பயத்தை ஏற்படுத்துவார்கள்; ஆனால் செல்வராகவன் அதுபோன்ற வில்லத்தனத்தை வெளிப்படுத்தவில்லை. அவருக்கான பின்னணியும், அவரது செயலுக்கான வலுவான காரணங்களும் தெளிவாகச் சொல்லப்படாதது குறையாகும். மேலும், மற்றொரு டிவி தொகுப்பாளர் கருணாகரன் கதையில் ஏதாவது திருப்பம் தருவார் என எதிர்பார்க்கும்போது, அதுவும் மந்தமானதாக முடிகிறது.

வில்லனின் கதாபாத்திரத்தில் காணப்பட வேண்டிய அழுத்தம் செல்வராகவனின் நடிப்பில் முழுமையாக வெளிப்படவில்லை. வழக்கமான போலீஸ் விசாரணை மாதிரியே கதை நகர்ந்தாலும், செல்வராகவன் நால்வரை எப்படி கொலை செய்கிறார்? அவர்கள் யார்? என்பதில் வரும் காட்சிகள் சுவாரஸ்யமும் பரபரப்பும் தருகின்றன. ஒவ்வொரு முறையும் அவர் வீடியோவில் தோன்றி முன்னறிவிப்பு கொடுப்பது புதுமையாக அமைந்துள்ளது. கொலையாளிகளின் பின்னணி, அவர்கள் கொல்லப்படும் விதம் போன்றவை விவரமாகக் காட்டப்பட்டிருப்பது படத்திற்கு பிளஸ் பாயிண்ட். குறிப்பாக கடைசி சில நிமிடங்களின் கிளைமாக்ஸ் காட்சிகள் பார்வையாளர்களை திக் திக் என வைத்திருக்கின்றன.

- Advertisement -

Read more

Local News