ஒரு பள்ளி மாணவன், கல்லூரி மாணவன், வேலைக்கு செல்லும் இளைஞனின் காதலை மையமாகக் கொண்ட கதை இது. மூன்று மாறுபட்ட காதல்களின் வழியாக ஹீரோவின் மனநிலைகள், ஆர்வக்கோளாறு, சரி-தவறுகள், உண்மையான காதலின் அர்த்தம் ஆகியவற்றை யூத் புல்லாகச் சொல்லும் முயற்சியாக இப்படம் அமைந்துள்ளது. ‘முதல் நீ, முடிவும் நீ’, ‘சிங்க்’, ‘தருணம்’ போன்ற படங்களில் நடித்த கிஷன் தாஸ் ஹீரோவாகவும், ‘இதுதாண்டா போலீஸ்’ படத்தில் டாக்டர் ராஜசேகரின் மகளாக அறிமுகமான ஷிவாத்மிகா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். நடிகர் தியாகுவின் மகனான சாரங் தியாகு இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

பள்ளியில் படிக்கும் சக மாணவியை காதலிக்கும் ஹீரோவின் முதல் காதல் முடிவில்லாமல் போகிறது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் அவர் காதலிக்கும் மற்றொரு பெண்ணுடனும் அதே நிலைதான். பின்னர் ஒரு மேட்ரிமோனியல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தபின், அங்கே மேலாளராக இருக்கும் ஷிவாத்மிகாவுடன் ஆரம்பத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள், சண்டைகள் பின்னர் காதலாக மாறுகிறது. ஆனால் சில காரணங்களால் அவர்கள் பிரிகிறார்கள். அந்த காதலை மீண்டும் பெற ஹீரோ போராடுகிறான். இறுதியில் அவரது மூன்றாவது காதல் வெற்றி பெறுகிறதா என்பதே கதையின் மையம். “விண்ணை தாண்டி வருவாயா” திரைப்படத்தின் “ஆரோமலே” என்ற பாடலில் வரும் வரியில் இருந்து இப்படத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதற்கு “என் அன்பே” என்று பொருள்.
மூன்று வயது கட்டங்களிலும் பள்ளி மாணவன், கல்லூரி மாணவன், இளைஞன் கிஷன் தாஸ் சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக எடை குறைத்து பள்ளி மாணவனாக நடித்த காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. அந்த கலகலப்பான பள்ளிக் காட்சிகள் படத்தின் பலமாக அமைந்துள்ளன. கல்லூரி பகுதிகள் ஓரளவு நன்றாக இருந்தாலும், இளைஞனாக வரும் பகுதிகளில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு சிறப்பாக இருந்தது. எனினும் சில இடங்களில் முகபாவனைகள் சற்று தளர்வாக இருந்தது.
ஷிவாத்மிகா நடித்த காட்சிகள், அவரது கதாபாத்திரத்தின் ஆழமான பின்னணி ஆகியவை மனதில் நிற்கும் வகையில் உள்ளன. ஹீரோ காதலை வெளிப்படுத்தும் கிளைமாக்ஸ் காட்சியில் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சி நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது. ராஜா ராணி பாண்டியன் (அப்பா), துளசி (அம்மா), வி.டி.வி. கணேஷ் ஆகியோரின் நடிப்பு இயல்பாக இருந்தது. துளசியின் தாய்மையின் வெளிப்பாடு, வி.டி.வி. கணேஷின் வாழ்க்கை பற்றிய நகைச்சுவையான ஆலோசனைகள், பாண்டியனின் மகனுக்கான அன்பு ஆகியவை சிறப்பாகப் பதிந்துள்ளன.
ஹீரோ நண்பனாக நடித்த ஹர்ஷத் கான், தனது காமெடி, குறும்புகள், ஆன்லைன் ஜோக்குகள் மூலமாக படத்தை இன்னும் கலகலப்பாக்குகிறார். அவருக்கு எதிர்காலம் பிரகாசமானது. ஹீரோயின் தாத்தாவாக குறைந்த நேரத்திலேயே நடித்த காத்தாடி ராமமூர்த்தி தனது அனுபவத்தால் தனி முத்திரை பதித்துள்ளார். கவுதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு குறிப்பாக பாடல் காட்சிகள் மற்றும் பள்ளி பகுதிகளில் அழகாக அமைந்துள்ளது. சித்து வழங்கிய பின்னணி இசை மற்றும் காதல் பாடல்கள் படத்தின் உணர்வை உயர்த்துகின்றன. மொத்தத்தில், இன்றைய இளைஞர்களின் மனநிலையையும், காதலின் உண்மையான பொருளையும் வெளிப்படுத்த முயன்ற, மென்மையான யூத் ரொமான்ஸ் டிராமாவாக “ஆரோமலே” அமைந்துள்ளது.

