சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் ரியோ ராஜ் மற்றும் கோவையைச் சேர்ந்த மார்டன் பெண் மாளவிகா மனோஜ் இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்குப் பிறகு சில மாதங்கள் மகிழ்ச்சியாக செல்லும் இவர்களின் தனிக்குடி வாழ்க்கையில், ஒரு கட்டத்தில் பிரச்சனைகள் உருவாகின்றன. இருவரும் தங்களது ஈகோவின் காரணமாக சண்டைபோட்டு, இறுதியில் விவாகரத்து வரை செல்லும் நிலை உருவாகிறது. இதே நேரத்தில், முன்பு விவாகரத்து பெற்ற வக்கீலர்களான விக்னேஷ்காந்த் மற்றும் ஷீலா இருவரும் இவர்களுக்காக வழக்கில் வாதாடுகின்றனர். விவாகரத்து கிடைக்கிறதா இல்லையா என்ற கேள்வியைத்தான் புதுமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ள ‘ஆண்பாவம் பொல்லாதது’ திரைப்படம் மையக்கருவாகக் கொண்டுள்ளது.

ஐ.டி ஊழியராக, ஆரம்பத்தில் தனது புதிய மனைவியை அன்போடு கெஞ்சுபவராகவும், பின்னர் சண்டைபோட்டு விவாகரத்து வழக்கில் சிக்கி நீதிமன்றத்தில் தவிப்பவராகவும் ரியோ ராஜ் தனது நடிப்புத் திறனை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு முன்பு பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் அவரின் கதாபாத்திரம், நடிப்பு, கோபம் மற்றும் மனைவியின் மீது கொண்ட பாசம் ஆகியவை ரியோவின் திறமையை வித்தியாசமாக வெளிக்கொணர்கின்றன. குறிப்பாக, சமூக வலைத்தள ரீல்களில் வீட்டுக்குள் ஏற்படும் சண்டைகள், குடும்ப பிரச்சனைகளில் ஆண்களுக்கு ஆதரவாக அவர் பேசும் வசனங்கள் பல ஆண்களின் மனதிலும் நன்றியை ஏற்படுத்துகின்றன. “என் இனம்டா நீ” என பெருமை கொள்வதற்கு வழிவகுக்கின்றன.
தன் வாழ்க்கையில் சுதந்திரமாகவும், பீர் குடிப்பதிலும், தாலியை கழற்றி வைக்கும் பகுத்தறிவு பெண்ணாகவும் மாளவிகா தோன்றுகிறார். அவரது ரீல்ஸ் மீது உள்ள ஈடுபாடு, கணவருடன் சண்டைபோடும் காட்சிகள் ஆகியவை படத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகின்றன. ஆனால் இடைவேளைக்குப் பிறகு அவரது கதாபாத்திரம் பலவீனப்படுத்தப்பட்டு, ஆரம்பத்தில் புத்திசாலித்தனமாகவும் புரட்சிகரமான சிந்தனை கொண்டவளாகவும் காட்டப்பட்ட அவரை கடைசியில் சாதாரண பெண்ணாக மாற்றியிருப்பது இயக்குநரின் ஆணாதிக்கக் கண்ணோட்டத்தைக் காட்டுகிறது.
இவர்களைத் தவிர, ரியோவுக்கு ஆதரவாக வாதிடும் விக்னேஷ்காந்த், மாளவிகாவுக்கு ஆதரவாக களம் இறங்கும் வக்கீல் ஷீலா ஆகியோரின் நடிப்பு மிகுந்த நம்பகத்தன்மையுடன் அமைந்துள்ளது. பிரிந்த தம்பதிகளுக்கிடையேயான போட்டி, நீதிமன்ற வாதங்கள் அனைத்தும் மிகச் சுறுசுறுப்பாக நகர்கின்றன. விக்னேஷ்காந்தின் ஜூனியர் வக்கீலாக வரும் ஜென்சன் திவாகர் பல காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது அப்பாவித்தனமான முகபாவனைகள் மற்றும் கிண்டல் வசனங்கள் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றன. ஹீரோயின் அப்பாவாக வரும் இயக்குநர் ஏ. வெங்கடேஷ், ஹீரோ அம்மாவாக வரும் நடிகை, ஜட்ஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி போன்ற கதாபாத்திரங்களும் மனதில் நீங்கா தடம் விட்டுச் செல்கின்றன.
திரைப்படம் முழுவதும் ஒரு வித கிண்டல், நக்கல், நகைச்சுவை உணர்ச்சி கலந்து, கதைச்சரத்தை பிரஷாக நகர்த்துகிறது. அதிலும் இடைக்கிடையாக வரும் வசனங்கள் மிகுந்த தாக்கத்துடன் இருக்கின்றன. ஜி.யு. போப், போர்பந்தர் டயலாக்குகள், ஜென்சன் திவாகர் கூறும் கவுண்டர்கள், ரியோ மற்றும் மாளவிகா கேட்கும் கோபக் கேள்விகள் ஆகியவை “படம் நல்லா இருக்கே, நம்ம வாழ்க்கையோட ஒத்துப்போகுதே” என்ற உணர்வைத் தருகின்றன.
குறிப்பாக, ஆண்களுக்கு ஆதரவான காட்சிகள், ரியோவின் மனசாட்சி போல் தோன்றும் செயல்கள், அதற்கு மாளவிகா வழங்கும் எதிர்வினைகள், அவரது கோபம், பிடிவாதம், குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகள் ஆகியவை சினிமாத்தனமில்லாமல் இயல்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. நீதிமன்றக் காட்சிகளிலும் கூட இயக்குநர் சீரியஸாகாமல், ரசிக்கும்படி கையாள்ந்துள்ளார். பெண் பார்க்கும் காட்சிகள், போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றக் காட்சிகளிலும் நகைச்சுவை கலந்து அமைந்துள்ளது படத்திற்கு கூடுதல் பலம்.


 
