தெலுங்கு திரைத்துறையின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர், ‘கே.ஜி.எஃப்’ மற்றும் ‘சலார்’ போன்ற பான்-இந்தியா வெற்றிப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கும் ‘டிராகன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் நடித்த ‘தேவரா’ மற்றும் ‘வார் 2’ போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், தற்போது ‘டிராகன்’ திரைப்படத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சமீபத்தில் எடுத்த சில காட்சிகள் குறித்து அவர் திருப்தியற்ற நிலையில் இருந்ததாகவும், அதன் காரணமாக திரைக்கதையில் சில மாற்றங்களைச் சொல்லியிருப்பதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.
இருப்பினும், நடிகர் ஜூனியர் என்டிஆர் தரப்பு இதை மறுத்து, படத்தின் அடுத்த கட்ட ஷெட்யூல் விரைவில் ஹைதராபாத்தில் தொடங்கும் என்று உறுதியாக தெரிவித்துள்ளது.

