ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார் நடித்திருக்கும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றியுள்ளார். இப்படத்தில் திரிஷா, பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி, பிரபு, பிரியா வாரியர், சிம்ரன் மற்றும் ஜாக்கி ஷரோப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்துள்ளார்.
இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. அஜித் ரசிகர்கள் வழக்கம்போல் பேனர்கள், கேக் வெட்டும் விழா, மேளதாள ஒலியுடன் அதிகாலையே திரையரங்குகளுக்கு வந்து உற்சாகத்துடன் கொண்டாடினர்.
இந்நிலையில், இந்தப் படம் பெற்ற வரவேற்பு குறித்து இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில், “படத்திற்கு அளித்த அதிரடியான வரவேற்புக்கும், பின்னணி இசைக்கு வழங்கிய பாராட்டுகளுக்கும் நன்றி. படம் பிளாக்பஸ்டர். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.