நடிகர் விஷால் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் சறுக்கலை சந்தித்த நிலையில், 2023-ஆம் ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி, சில பிரச்னைகளின் காரணமாக கிடப்பில் இருந்த மத கஜ ராஜா திரைப்படமும் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த வெற்றிகள் விஷாலை மிகவும் உற்சாகமாகக் கொண்டுவந்துள்ளன. அதே சமயம், விஷால் தன் அடுத்த படமாக துப்பறிவாளன் 2 படத்தை இயக்கப் போவதாக அறிவித்திருந்தார். மேலும், அவர் நேற்று மத கஜ ராஜா வெற்றி விழாவில் பேசியதின்போது, இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் இன்னொரு படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இதே போல், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்திலும் ஒரு புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இதுவரை, விஷால் இயக்குநர் சுந்தர் சி-யுடன் ஆம்பள மற்றும் ஆக்ஷன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இப்போது மத கஜ ராஜா வெற்றி பெற்றதால், மீண்டும் சுந்தர் சி அழைத்தால், அவருடன் வேலை செய்ய தயாராக இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.இதற்கிடையில், கவுதம் மேனன் தற்போது மலையாளத்தில் மம்முட்டி மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடித்து வரும் டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படம் முடிந்ததும், அவர் விஷால் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.