நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் தனது 50 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறார். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ‛அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமானார். 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியானது. கடந்த 50 ஆண்டுகளில் ரஜினிகாந்த் நடித்த படங்களின் எண்ணிக்கை 171 ஆகும்.

திரையுலகில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த அவர், இருமுறை பத்ம விபூஷண் விருதும், இந்திய திரையுலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதும் உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில், சினிமா பயணத்தின் 50 ஆவது ஆண்டை நிறைவு செய்யும் ரஜினிகாந்துக்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “1975 ஆம் ஆண்டு வெளிவந்த ‛அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து, தற்போது வெளிவந்துள்ள ‛கூலி’ படத்துவரை 170 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துத் தொடர்ந்து ஐம்பது ஆண்டுகளாக திரையுலகில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார் எனது அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். அவர் மேலும் பல்லாண்டுகள் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து, இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்பதே எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்தாகும்” என்று தெரிவித்துள்ளார்.