ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இதில் அஜித் மூன்று விதமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியானதிலிருந்து, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. படம் தணிக்கை குழுவால் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும், இந்த படத்தின் நீளமானது 2 மணி நேரம் மற்றும் 19 நிமிடங்களாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. திரையரங்குகளில் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடினர். படம் வெளியாவதற்கு முன்பே, நேற்று இரவிலிருந்தே ரசிகர்கள் திரையரங்குகளில் கூடி உற்சாகம் காட்டினர். அஜித்தின் பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர். திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டத்தை கணக்கில் கொண்டு, போலீசாரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. மேலும், இப்படத்தில் நடித்த நடிகர்கள் சிலரும் ரசிகர்களுடன் சேர்ந்து திரையரங்கில் படம் பார்ப்பதற்காக வந்தது குறிப்பிடத்தக்கது.