இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘ஈரம்’ திரைப்படம் சிறந்த வரவேற்பை பெற்றது. இதில் நடிகர் ஆதி, சிந்து மேனன், நந்தா துரைராஜ், சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 14 ஆண்டுகளுக்குப் பிறகு, இயக்குநர் அறிவழகன் மீண்டும் நடிகர் ஆதியுடன் கூட்டணி அமைத்து ‘சப்தம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஆதி, ‘ரூபன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம். எஸ். பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமன் இசையில் உருவான இப்படத்தின் முதல் பாடல் ‘மாயா மாயா’ சமீபத்தில் வெளியானது, மேலும் அது வைரலாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. ‘ஈரம்’ படத்தைப் போன்று ஹாரர்-திரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘சப்தம்’ திரைப்படமும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. சஸ்பென்ஸ், திகில் என பரபரப்பாக உருவாகியுள்ள இப்படம் சில காரணங்களால் கடைசி நேரத்தில் வெளியாவதில் சிக்கல் நீடித்தது. பின்னர் அனைத்து தடைகளையும் தாண்டி மார்ச் 1 ஆம் தேதி காலை முதல் திரையரங்குகளில் வெளியாகியது.

‘சப்தம்’ திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.1 கோடியும், மூன்று நாட்களில் ரூ.3 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் ஷங்கர், ‘சப்தம்’ படத்தை பார்த்துவிட்டு, படக்குழுவினரை பாராட்டியிருந்தார். இந்நிலையில் இயக்குநர் அறிவழகன், ‘சப்தம்’ திரைப்படம் குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் நெகிழ்ச்சியுடன் தனது நன்றியை ரசிகர்களுக்கு கூறியுள்ளார். அதில், சப்தம்’ படத்தினை தாமதமாக வெளியிட்டு, விளம்பரமின்றி கொன்றார்கள். ஆனால் ரசிகர்கள் அந்தப் படத்தினை கொல்லவில்லை. திரையரங்குகளுக்கு வந்து படம் பார்த்து, மிகுந்த அன்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி. அந்த அன்பிற்கு மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன்என்று அவர் தெரிவித்துள்ளார்.