மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில், லியோ ஜான் பால் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ககன மார்கன்”.இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, ஒரு உயர் காவல் அதிகாரியாக வித்தியாசமான தோற்றத்துடன் நடித்துள்ளார். “ககன மார்கன்” என்றால் சித்தர்களின் அகராதியில் ‘காற்றின் வழி பயணிப்பவன்’ என்று பொருள் கொண்டது. கடந்த காலத்தில், அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், முதலாம் நாள், தெகிடி, முந்தாசுப்பட்டி, மாயவன் போன்ற வெற்றி பெற்ற திரைப்படங்களில் படத்தொகுப்பாளராக இருந்தவர் லியோ ஜான் பால்.
இந்தப் படம் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ள இப்படத்தில், அவருடன் அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர, தீப்ஷிகா, கலகலப்போவது யாரு புகழ் அர்ச்சனா, கனிமொழி, அந்தகாரம் நட்ராஜன் போன்றவர்களும் நடித்துள்ளனர்.
அஜய் தீஷன், இப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான “சொல்லிடுமா” வீடியோ பாடல் வெளியிடப்பட்டது. லாவர்தன் எழுதிய வரிகளில், விஜய் ஆண்டனி பாடிய இந்த பாடல், மிகவும் வைபாகவும் துள்ளலாக அமைந்துள்ளது.திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் விரைவில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது, இது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.