தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராகவும், தமிழில் விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தை தயாரித்தவராகவும் இருக்கும் தில் ராஜு, ஹைதராபாத்தில் ‘லார்வென் ஏஐ ஸ்டுடியோ’ என்ற பெயரில் ஒரு முழுமையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப (ஏஐ) ஸ்டுடியோவை தொடங்கி வைத்துள்ளார். நேற்று நடைபெற்ற திறப்பு விழாவில், தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சர் இந்த ஸ்டுடியோவைத் திறந்து வைத்தார். மேலும், இந்த விழாவில் தெலுங்குத் திரையுலகத்தை சேர்ந்த முக்கியமான தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களும் பங்கேற்றனர்.

இதில் பேசிய தில் ராஜு, ஏஐ ஸ்டுடியோ ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன் ஏற்பட்டது. சினிமாவில் ஏஐ பயன்படுத்தும் விதங்களை விரிவாக ஆராய ‘குவாண்டம் ஏ’ நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தினேன்,” எனக் குறிப்பிட்டார்.ஒரு திரைப்படத்தின் முன் தயாரிப்பு, பின் தயாரிப்பு மற்றும் விளம்பரக் கட்டமைப்புகளில் எல்லாவிதமாக ஏஐ பயன்படுத்தப்படும். ஒரு கதை எழுதி முடிந்தவுடன், அதன் காட்சிகளை சவுண்டுடன் சேர்த்து ஏஐ மூலமாக முன்காட்சி வடிவத்தில் பார்க்க முடியும். இதுவே எங்கள் முதன்மை நோக்கம்.
ஏஐ எதிர்காலத்தில் இன்னும் பல புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தும். இது படங்களின் வெற்றிச்சாத்தியத்தைக் கூட அதிகரிக்கச் செய்யும். ஏஐ தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் இயக்குநர்களும் எழுத்தாளர்களும் தங்கள் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். தயாரிப்பாளர்களின் செலவுகளும் குறைவாகும். இதனால் தரமான படங்களை அதிக அளவில் உருவாக்கலாம். ஏஐ என்பது உணர்வுகள் இல்லாத உதவி இயக்குநராக இருக்கக்கூடியது,” என்றும் தில் ராஜு தெரிவித்தார்