அட்லி இயக்கத்தில் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த மாதம் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு நிறைவு பெற்றது. அந்தப் பாடலுக்கான நடன அமைப்பை ஜப்பான் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற நடன இயக்குனர் ஹொகுடோ கொனிஷி மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து ஹொகுடோ கொனிஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இப்போது ஒரு ரகசியம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. கடந்த மாதம் நான் இந்திய திரைப்படத் துறையில் பணியாற்றிய அனுபவத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.
இந்திய திரைப்பட உலகம் குறித்த எனது ஆர்வம் எப்போதும் அதிகமாக இருந்தது. அந்த ஆர்வத்துடன் முழுக்குள் குதித்து பணியாற்றிய அனுபவம் மிகச் சிறந்ததாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, தற்போது இதைப்பற்றி அதிகமாக பகிர முடியாது. ஆனால் இந்த படத்திற்காக மிகுந்த நேரமும் கடின உழைப்பும் செலவழிக்கப்பட்டுள்ளது என்பதோடு, அது நிச்சயமாக பிரம்மாண்டமான ஒன்றாக இருக்கும். பல்வேறு கலாச்சாரங்களை அறிந்து கொள்வதற்கும் அவற்றில் இணைந்து பணியாற்றுவதற்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

