2022 ஆம் ஆண்டு, பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘லவ் டுடே’. இப்படம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இயக்குனர் பிரதீப் ரங்கநாதனே இப்படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் இளைஞர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்போது, ‘லவ் டுடே’ ஹிந்தியில் ‘லவ்யப்பா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரீமேக் படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். இதில் நடிகர் ஆமீர்கானின் மூத்த மகன் ஜுனைத் மற்றும் நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் பேண்டம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.